Published : 23 Jan 2025 04:48 PM
Last Updated : 23 Jan 2025 04:48 PM

“நான் அல்ல.... வருண் சக்ரவர்த்திதான் வெற்றிக்கு காரணம்!” - அபிஷேக் சர்மா

இந்திய அணியின் புதிய டி20 ஓப்பனிங் ஸ்டார் அபிஷேக் சர்மா, “என்னிடமிருந்து இத்தகைய தாக்குதல் ஆட்டத்தைத்தான் அணியினர் எதிர்பார்க்கின்றனர், அதைத்தான் செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கொல்கத்தாவில் நேற்று அபிஷேக் சர்மா 8 சிக்சர்களுடன் 34 பந்துகளில் 79 ரன்களை விளாசித் தள்ளினார். ஆனால், இவர் தன் முதல் 12 டி20 சர்வதேசப் போட்டிகளில் 8 போட்டிகளில் 20 ரன்களுக்கும் கீழ் ஆட்டமிழந்தவர். ஆனாலும் இவர் திறமை மீது நம்பிக்கை வைத்து இவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வந்ததன் பலன் நேற்றைய அதிரடி இன்னிங்ஸ்.

இந்தியாவில் ஓப்பனிங் நிலைக்கு ஏகப்பட்ட போட்டி உள்ளது. அதனால் அபிஷேக் தலை மீது எப்பவுமே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் ஹை ரிஸ்க் அட்டாக்கிங் கேமை ஆடுகிறார் அபிஷேக்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஆரம்பத்திலிருந்தே அணிக்கான வீரராக இருக்கவே விரும்பினேன். இந்திய அணியில் இடம்பெற போட்டி அதிகம். ஆனால் கேப்டன் சூரியகுமார் யாதவ், பயிற்சியாளர் கம்பீர், என் அட்டாக்கிங் பாணி ஆட்டத்தை எதுவும் மாற்ற வேண்டாம் என்று ஊக்கப்படுத்தி வந்தனர். இது எனக்குப் பெரிய தருணம், என் அணி என்னை இதைச் செய் என்று கூறும்போது எனது தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

ஒரு பேட்டராக கடந்த சில இன்னிங்ஸ்களில் ரன் எடுக்காமல் போவது மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அப்போதும் கூட கேப்டன், பயிற்சியாளர், ‘உன்னால் போட்டியை வென்று தர முடியும் போய் நீ உன் இஷ்டப்படி ஆடு’ என்று கூறி உற்சாகப்படுத்துவார்கள். கேப்டனும் கோச்சும் இப்படிச் சொல்லு போது நமக்கு உண்மையில் தன்னம்பிக்கை கூடுகிறது.

நான், யுவராஜ் சிங்குடன் ஆரம்பக்கட்டத்தில் பணியாற்றி பயிற்சி பெற்றேன், பிறகு பிரையன் லாராவிடம் பயிற்சி பெற்றேன். சன் ரைசர்ஸில் லாரா உண்மையில் எனக்கு பெரிய உதவிபுரிந்தார். டேனியல் வெட்டோரியும் இப்படி ஆடுவதையே விரும்புவார். இதனால் சுதந்திரமாக என்னால் ஷாட்களை ஆட முடிகிறது.

இப்போது கோட்டக் மற்றும் அபிஷேக் நாயர் வலைப்பயிற்சியில் என் மீது அதிக கவனம் செலுத்தி வழிநடத்தினர். ஆனால், நான் என்னதான் ஆடினாலும் வருண் சக்ரவர்த்திதான் போட்டியை வென்று கொடுத்தார். எதிரணி வீரர்கள் அவரது பந்து வீச்சை கணிக்க முடியாமல் திணறுகின்றனர். அதே போல்தான் ரவி பிஷ்னாய், அக்சர் படேல் போன்றோரையும் அத்தனை எளிதாக பெரிய ஷாட்களை ஆட முடியாது” என்று அபிஷேக் சர்மா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x