Published : 22 Jan 2025 08:08 AM
Last Updated : 22 Jan 2025 08:08 AM

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்: வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி

கொல்கத்தா: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கும், சரியான அணி சேர்க்கையை கண்டறிவதற்கும் இந்திய அணிக்கு, இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு தொடர் உதவக்கூடும்.

வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்துள்ளது பலம் சேர்க்கக்கூடும். கடைசியாக அவர், 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையடி இருந்தார். அந்தத் தொடரில் ஷமி முதல் 4 ஆட்டங்களில் விளையாடாத போதிலும், 24 விக்கெட்களை வேட்டையாடி அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தார். தற்போது ஜஸ்பிரீத் பும்ரா விளையாடாத நிலையில் ஷமி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

34 வயதான ஷமி உடற்தகுதியை நிரூபிப்பதற்காக ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடியிருந்தார். தொடர்ந்து சையது முஸ்டாக் அலி தொடரில் 11 விக்கெட்களையும், விஜய் ஹசாரே தொடரில் 5 விக்கெட்களையும் வீழ்த்தி கவனம் ஈர்த்தார். சர்வதேச டி 20 போட்டியில் ஷமி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் அவர், சர்வதேச டி 20 போட்டியில் களமிறங்குகிறார்.

ஆல்ரவுண்டரான அக்சர் படேல் முதன்முறையாக துணை கேப்டனாக விளையாட உள்ளார். கடந்த வரும் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் அக்சர் படேல் இறுதிப் போடடியில் 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். மேலும் பந்து வீச்சில் 9 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.

பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்ய குமார் யாதவ், ரிங்கு சிங், ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து மிரட்டியிருந்தார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி மற்றும் ரஞ்சி கோப்பையில் கேரள அணியில் புறக்கணிக்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தனது திறமையை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். வேகப்பந்து வீச்சில் ஷமியுடன் அர்ஷ்தீப் சிங் இணைந்து செயல்படக்கூடும். சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லத்தின் கீழ் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியால் மேத்யூ பாட் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ததால் அவரது இடத்துக்கு மெக்கல்லம் கொண்டுவரப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் ‘பாஸ்பால்’ அணுகுமுறையால் புரட்சியை உருவாக்கிய மெக்கலம், டி 20 வடிவிலும் அதனை பிரதிபலிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தக்கூடும்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கவனம் ஈர்த்த 21 வயதான பேட்ஸ்மேன் ஜேக்கப் பெத்தேல் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை 7 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ள அவரது சராசரி 57.66 ஆக இருக்கிறது. டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான பென் டக்கெட் 6 வருடங்களுக்குப் பிறகு டி 20 அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இவர்களுடன் ஜாஸ் பட்லர், ஹாரி புரூக், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

அணிகள் விவரம் - இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரெல், ஹர்திக் பாண்டியா, நித்திஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

இங்கிலாந்து விளையாடும் லெவன்: ஜாஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், மார்க் வுட். நேரம்: இரவு 7 மணி, நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x