Published : 22 Jan 2025 07:59 AM
Last Updated : 22 Jan 2025 07:59 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் போராடி தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10-வது நாளான நேற்று கால் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பாலை எதிர்த்து விளையாடினார். இதில் ஜிவேரேவ் 7-6 (7-1), 7-6 (7-0), 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
10 முறை சாம்பியனும் 7-ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 4-6, 6-4, 6-00 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் நழைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோ கோ காஃப், 11-வது இடத்தில் ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார். இதில் கோ கோ காஃப் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் 27-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
போபண்ணா ஜோடி தோல்வி: கலப்பு இரட்டையர் பிரிவில் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ், ஆலிவியா கடெக்கி ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 6-2, 4-6, 9-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT