Published : 21 Jan 2025 07:51 PM
Last Updated : 21 Jan 2025 07:51 PM
சென்னை: நடப்பு ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் மலேசியாவை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் ஹாட்ரிக் உடன் மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை வைஷ்ணவி சர்மா.
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா பங்கேற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடுகின்றன. 41 போட்டிகள். 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிந்து முதல் சுற்றில் விளையாடுகின்றன. தொடர்ந்து ‘சூப்பர் 6’ சுற்று நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடிக்கின்ற அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து விளையாடும். பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடைபெறுகிறது.
குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் தொடரை நடத்தும் மலேசியா அணிகள், இன்று (ஜன.21) விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. கூடவே பவுன்ஸும் இருந்தது. அதை பயன்படுத்தி இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை வைஷ்ணவி சர்மா, 4 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். தனது முதல் போட்டியான இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி அசத்தினார்.
ஆயுஷி சர்மா 3 மற்றும் ஜோஷிதா 1 விக்கெட்டை கைப்பற்றினர். மலேசியாவின் ஆலியா ரன் அவுட் ஆனார். 14.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்களை எடுத்தது மலேசியா. 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 2.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டி வெற்றி பெற்றது இந்தியா. இந்திய வீராங்கனை த்ரிஷா 12 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார். இந்த தொடரில் இது இந்திய அணியின் இரண்டாவது வெற்றி. முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்திய வீழ்த்தி இருந்தது. வரும் 23-ம் தேதி இலங்கையுடன் குரூப் சுற்று போட்டியில் விளையாட உள்ளது.
இந்த போட்டியில் பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்ற வைஷ்ணவி, “அறிமுக போட்டியில் ஹாட்ரிக் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளேன். இது சிறந்தது. எனது கிரிக்கெட் பயணம் ஏற்றமும் இரக்கமும் கொண்டது. ராதா யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா என்னுடைய ரோல் மாடல். நேற்று இரவு இந்த ஆடுகளத்தில் எப்படி விக்கெட் வீழ்த்துவது என மனக்கண்ணில் நான் கற்பனை செய்து பார்த்தேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT