Published : 21 Jan 2025 07:42 AM
Last Updated : 21 Jan 2025 07:42 AM
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று (21.01.2025) இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதுகின்றன.
மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணி 16 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 டிரா, 7 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் 36 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. சென்னையின் எஃப்சி அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை. அந்த அணி 2 போட்டிகளை டிரா செய்தது, 2 போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் வெற்றி வறட்சிக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கக்கூடும்.
மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி தனது சொந்த மண்ணில் கடந்த நவம்பர் 30-ல் சென்னையின் எஃப்சி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறையும் அந்த அணி வெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கு எதிராக ஒரே சீசனில் முதன்முறையாக இரு வெற்றியை குவித்த பெருமையை பெறும்.
சென்னையின் எஃப்சி அணி டிபன்ஸில் தடுமாறி வருகிறது. இந்த சீசனில் அந்த அணி இரு ஆட்டங்களில் மட்டுமே கோல் வாங்கவில்லை. ஒட்டுமொத்தமாக அந்த அணி இந்த சீசனில் 27 கோல்களை வாங்கியுள்ளது. இதில் கடைசி 5 ஆட்டங்களில் 9 கோல்களை வாங்கியதும் அடங்கும்.
அதேவேளையில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி இந்த சீசனில் இதுவரை 31 கோல்களை அடித்துள்ளது. ஜேமி மெக்லாரன் ஆறு கோல்கள் அடித்து அசத்தி உள்ளார். ஆல்பர்டோ ரோட்ரிக்ஸ், சுபாஷிஷ் போஸ், ஜேசன் கம்மிங்ஸ் ஆகியோர் தலா 4 கோல்களை அடித்துள்ளனர். இரு அணிகளும் 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணி 4 போட்டிகளிலும், சென்னையின் எஃப்சி அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT