Published : 20 Jan 2025 07:49 PM
Last Updated : 20 Jan 2025 07:49 PM
சென்னை: நடப்பு யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான குரூப் சுற்று ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 2 ரன்களில் வீழ்த்தியுள்ளது நைஜீரியா கிரிக்கெட் அணி. முதல் முறையாக இந்தத் தொடரில் விளையாடும் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா பங்கேற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடுகின்றன. 41 போட்டிகள். 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிந்து முதல் சுற்றில் விளையாடுகின்றன. தொடர்ந்து சூப்பர் 6 சுற்று நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து விளையாடும். பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடைபெறுகிறது.
இந்தச் சூழலில் குரூப்-சி அணிகளுக்கு இடையிலான முதல் சுற்று ஆட்டத்தில் இன்று (ஜன.20) நைஜீரியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பந்துவீச முடிவு செய்தது. மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்த ஆட்டம் மாற்றப்பட்டது. அதன்படி முதலில் பேட் செய்த நைஜீரியா, 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது.
66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் நைஜீரியா வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் நியூஸிலாந்து வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தது நைஜீரியா.
இந்த வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக நைஜீரியாவுக்கு அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா முதல் முறையாக இந்தத் தொடருக்கு தகுதி பெற்றது, ஐசிசி-யின் முழு நேர உறுப்பினராக உள்ள நியூஸிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்தத் தொடரில் நைஜீரியா விளையாடிய முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அடுத்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அந்த அணி எதிர்கொள்கிறது. எப்படியும் சூப்பர் 6 சுற்றுக்கு நைஜீரியா முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT