Published : 20 Jan 2025 12:42 PM
Last Updated : 20 Jan 2025 12:42 PM
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணித் தேர்வு பல அதிர்ச்சிகளைத் தந்துள்ளது. கருண் நாயர் இல்லை, சஞ்சு சாம்சன் இல்லை, சிராஜ் இல்லை. இதோடு ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில்லை துணை கேப்டனாக அறிவித்தது என்று பிசிசிஐ தொடர்ந்து ஸ்டார்களை தக்கவைப்பதில் காட்டும் மும்முரத்தை செயல்திறனுக்கு காட்டுவதில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
சஞ்சு சாம்சன் 2024-ல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி கலக்கியுள்ளார். ஆனால், விக்கெட் கீப்பர் என்று வரும்போது ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் என்று மீண்டும் மீண்டும் இவர்களையே தக்க வைக்கக் காரணம் என்ன என்ற கேள்வி அனைவரிடமும் எழவே செய்கிறது.
இதே கம்பீர் பிசிசிஐ அதிகார குழுவில் இல்லாத சமயம் 2020-ம் ஆண்டு ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ பேட்டியில் முன்பு என்ன கூறினார் தெரியுமா? “சஞ்சு சாம்சன் இந்தியாவுக்கு ஆடாமல் போனால் நஷ்டம் சஞ்சுவுக்கு இல்லை, அது இந்திய அணிக்குத்தான்.
விராட் கோலியையும் ரோஹித் சர்மாவையும் எப்படி பாதுகாக்கிறோமோ அதே போல் சஞ்சு சாம்சனும் பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் நம்பர் 1 வீரர் என்று வரக்கூடிய ஒரு திறமையை நாம் இழக்கிறோம். இதுவரை நாம் அவரைப் பாதுகாக்கவில்லை. பெரிய அறையில் இருப்பவர்களும், அணித்தேர்வுக்குழுவினரும் ஏன் சஞ்சு டி20 அணியிலோ அல்லது உலகக் கோப்பை அணியிலோ இல்லை என்று தங்கள் முடிவை பரிசீலிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அது 2020, இப்போது 2025. கம்பீர்தான் இந்திய அணியின் பயிற்சியாளர். அணித்தேர்வில் செல்வாக்கு செலுத்துபவர். ஆனால், ஏன் சஞ்சுவை தேர்வு செய்யவில்லை? அவர் 2020-ல் கூறியதை நினைவூட்டி கம்பீரிடம் கேட்டால், ஒருவேளை வடிவேலு ஒரு காமெடியில் கூறுவது போல், ‘அது வேற... இது வேற’ என்று கூறுவாரோ என்னவோ.
ஆனால், இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது, அதாவது கம்பீர், சஞ்சு தேவை என்று கூறியதாகவும் ரோஹித் சர்மாவும் அஜித் அகார்க்கரும் தான் சஞ்சு வேண்டாம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல்தான் வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
வெளிப்படைத்தன்மைக்கும் பிசிசிஐயின் செயல்பாடுகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதால் இவையெல்லாம் வெறும் உண்மை கலந்த யூகங்களாகவும், பொய் கலந்த அரை உண்மைகளாகவும் பார்க்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT