Published : 20 Jan 2025 09:56 AM
Last Updated : 20 Jan 2025 09:56 AM
இந்திய கிரிக்கெட் அணித்தேர்வைத் தீர்மானிப்பவர்கள் வீரர்களின் பி.ஆர் நிறுவனங்கள். வீரர்கள் இத்தகைய ‘லாபி’யின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற விமர்சனங்களை வெட்டவெளிச்சமாக்கும் விதமாக ஹர்ஷா போக்ளே பிசிசிஐ-க்கு நெத்தியடி பரிந்துரையை மேற்கொண்டுள்ளார்.
அதாவது உள்நாட்டுக் கிரிக்கெட் தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான கண்டிஷன், கட்டாயம், அளவுகோல் என்பதெல்லாம் வெறும் பீலா என்று இப்போது சாம்பியன்ஸ் டிராபி அணித்தேர்வில் பட்டவர்த்தனமாகியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ரவி சாஸ்திரி - விராட் கோலி - வர்த்தக லாபி கூட்டணி கருண் நாயரை வெளியேற்றியது. ஆனால் அவர் விடாமுயற்சியுடன் தன் பாணி ஆட்டத்தை மாற்றிக் கொண்டு உள்நாட்டு குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெளுத்து வாங்கி வருகிறார்.
நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் அவரது சராசரி பிரமிப்பூட்டும் வகையில் 700+ என்பது எப்படி அணித்தேர்வுக்குழுவின் பார்வையிலிருந்து தப்ப முடியும்? ஆனால் அகார்க்கர் என்ன கூறினார்? ‘15 வீரர்கள்தான். எல்லோரையும் எடுக்க முடியாது’ என்றார். இதே அடிப்படையில்தானே விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் தேர்வும் மேற்கொள்ளப்பட வேண்டும்? ஒரு பக்கம் உள்நாட்டு கிரிக்கெட் ஆடுவது கட்டாயம் என்பது, அப்படி கட்டாயமாக ஆடி வரும் கருண் நாயர் போன்றவர்கள், சர்பராஸ் கான் போன்றவர்கள் எவ்வளவு டன் கணக்கில் ரன்களைக் குவித்தாலும் அவர்களை எடுப்பதில்லை. எப்படி பிசிசிஐ மீது உள்நாட்டு கிரிக்கெட் ஆடும் வீரர்களுக்கு நம்பிக்கை வரும்?
அதனால்தான் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டை நோக்கி படையெடுக்கின்றனர். உள்நாட்டுக் கிரிக்கெட் ஆடாமல் ஐபிஎல் ஆடக்கூடாது, தடை விதிப்போம் என்பதெல்லாம் எதேச்சதிகார பாசிச செயல்பாடே. எங்கு இந்த ‘லாபி’ வீரர்களுக்கு செக் வைக்க வேண்டும் என்பதை ஹர்ஷா போக்ளே தெள்ளத் தெளிவாகப் புட்டுப் புட்டு வைத்து விட்டார்.
அதாவது வீரர்கள் தங்களுக்கென்றே, அதுவும் குறிப்பாக ஸ்டார் வீரர்கள் தங்களுக்கென்றே மக்கள் தொடர்பு முகவர்களை (பி.ஆர் ஏஜென்சிஸ்) வைத்துக் கொண்டு தங்களைத் தாங்களே புரொமோட் செய்து வருகின்றனர். இதற்கு சோஷியல் மீடியா பயன்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளர்களே இந்த பி.ஆர் வேலைகளைச் செய்வதுதான் பிரச்சினை. ஏனெனில் மக்கள் இந்த ஒளிபரப்பு ஊடகங்களை நம்புகின்றனர். இந்நிலையில், உலகக் கோப்பை 2023-க்கு முன்பும், டி20 உலகக் கோப்பை 2024-க்கு முன்பும், ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பும் ஏதோ விராட் கோலி மட்டுமே இந்திய அணியின் பெரிய வீரர் என்பது போன்று நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியதைப் பார்த்தோம்.
இப்படி மைய நீரோட்ட ஊடகங்கள் அணியின் ஸ்டார் வீரர்களுக்கு சொம்பு தூக்கும் வேலைகளைச் செய்வது பி.ஆர் முகமை நிறுவனங்களே. அதாவது இப்படி இவர்களைக் காட்டிக் காட்டி ரசிகர்கள் மத்தியில் விராட் கோலியோ, ரோஹித் சர்மாவோ, ஷுப்மன் கில்லோ, கே.எல்.ராகுலோ அணிக்கு இன்றியமையாதவர்கள் என்ற பிம்பத்தை, கருத்தொற்றுமையை உருவாக்குகின்றனர். அமெரிக்க மொழியியல்/அரசியல்/சமூக சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி கூறுவது போல் ஊடகங்கள் ஸ்டார் பிளேயர்களின் பிஆர்களாகச் செயல்பட்டு ‘Manufacturing Consent’ செய்கின்றனர். இதனால் அணித்தேர்வுக்குழுவினர் அவர்களை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர். இவ்வளவு ரசிகப்படை உள்ளவரை நீக்கி நாம் ஏன் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வேண்டும் என்று அவர்களை தக்க வைக்கின்றனர்.
இதனால் தான் ஹர்ஷா போக்ளே, “பிசிசிஐ முதலில் அணி வீரர்கள் பி.ஆர் முகமைகளை வைத்துக் கொள்வதை தடை செய்ய வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளார். இது உண்மையில் ஒரு பெரிய மூவ், இதைச் செய்தால் மாற்றங்கள் தானாக வரும். கருண் நாயரை ஏன் எடுக்கவில்லை, சர்பராஸ் கானுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை போன்ற கேள்விகளுக்குக் குறைந்தது அபத்தமான பதில்களையாவது அகார்கர், கம்பீர் போன்றவர்கள் கூறாமல் தவிர்க்க முடியும். அந்த வகையில் ஹர்ஷா போக்ளேயின் பரிந்துரை உண்மையில் நெத்தியடிதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT