Published : 19 Jan 2025 01:00 AM
Last Updated : 19 Jan 2025 01:00 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: டெய்லர் ஃபிரிட்ஸ், ஜாஸ்மின் பவ்லினி அதிர்ச்சி தோல்வி

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸும், மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவ்லினியும் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 7-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், 41-ம் நிலை வீரரான பிரான்ஸின் கேல் மோன்பில்ஸுடன் மோதினார். இதில் கேல் மோன்பில்ஸ் 3-6, 7-5, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 46-ம் நிலை வீரரான அமெரிக்காவின் மார்கோஸ் கிரோனை தோற்கடித்து 4-வது சுற்றில் கால்பதித்தார்.

19-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 3-6, 6-7 (5-7), 2-6 என்ற செட் கணக்கில் 20 வயதான 42-ம் நிலை வீரரான அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சனிடம் தோல்வி அடைந்தார். அலெக்ஸ் மைக்கேல்சன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். அவர், முதல் சுற்றில் 11-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை தோற்கடித்திருந்தார்.

8-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 5-7, 7-6 (7-3), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 31-ம் நிலை வீரரான பிரான்சிஸ்கோ செருன்டோலோவையும், 21-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 3-6, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ முசெட்டியையும் வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார். 6-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 23-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டயானா யஸ்டிரெம்ஸ்காவையும், 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஆனஸ் ஜபூரையும் வீழ்த்து 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

9-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கசட்கினா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் யுலியா புதின்சேவாவையும், 28-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவ்லினியை தோற்டிகத்து 4-வது சுற்றில் நுழைந்தனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுவல் ரெய்ஸ்-வரேலா ஜோடி 6-7 (1-7), 6-4, 3-6 என்ற செட் கணக்கில் போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ கப்ரால், நூனோ போர்கெஸ் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x