Published : 18 Jan 2025 12:03 AM
Last Updated : 18 Jan 2025 12:03 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் டென்மார்க்கின் கிளாரா டவுசனுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுகிறார் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா. படம்: ஏஎப்பி

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 33-ம் நிலை வீரரான போர்ச்சுகல் வீரர் நூனோ போர்கெஸுடன் மோதினார்.

2 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 6-2, 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 25-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் மச்சாக்கை வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தார்.

2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 92-வது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனின் ஜேக்கப் ஃபியர்ன்லியையும், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 7-6 (7-0), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்டோ கார்பல்ஸ் பீனாவையும், 24-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் பெஞ்சமின் போன்ஸியையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இரு முறை சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிளாரா டவுசனை வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தார். 14-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-2, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் 23-ம் நிலை வீராங்கனையான போலந்தின் மக்டலினா ஃபிரெச்சையும், 18-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக் 7-6 (7-4), 6-7 (3-7), 7-5 என்ற செட் கணக்கில் 12-ம் நிலை வீராங்கனையான டயானா ஷ்னைடரையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர்.

27-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லாரா சீக்மண்டையும், 11-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் பவுலா படோஸா 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் மார்டா கோட்ஸ்யுக்கையும் வீழ்த்தினர். 4 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜப்பானின் நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கை எதிர்த்து விளையாடினார். இதில் பெலின்டா முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றியிருந்த நிலையில் வயிற்று பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக ஒசாகா போட்டியில் இருந்து விலகினார்.

3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 30-ம் நிலை வீராங்கனையான லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில் போபண்ணா ஜோடி: கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி ஜோடி, குரோஷியாவின் இவான் டுடிக், பிரான்ஸின் கிறிஸ்டினா மிலடெனோவிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

செய்தித் துளிகள்:

* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது.

* டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 9-21, 21-19, 17-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரிஸ்காவிடம் தோல்வி அடைந்தார்.

* ரஞ்சி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக வரும் 23-ம் தேதி ராஜ்கோட்டில் டெல்லி அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்கான 22 பேர் கொண்ட டெல்லி அணியின் உத்தேச பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர், விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

* யு-19 மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (19-ம் தேதி) மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x