Published : 18 Jan 2025 12:00 AM
Last Updated : 18 Jan 2025 12:00 AM
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
விளையாட்டுத் துறையில் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியவா்கள், துறை சாா்ந்து சிறப்பாகச் செயல்படுபவா்களுக்கு ஆண்டுதோறும் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான விருது வென்றவா்கள் பட்டியலை விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதே ஆன டி.குகேஷுக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதினை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த பாரா பாட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் மற்றும் பாட்மிண்டன் வீரர் அபய் சிங் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜூனா விருதுகளையும் வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர்.
கேல் ரத்னா விருது பெற்றவர்களுக்கு ரூ.25 லட்சம் ரொக்க தொகை, பாராட்டு பத்திரம், பதக்கம் வழங்கப்பட்டது. அர்ஜூனா விருது பெற்றவர்களுக்கு ரூ.15 லட்சம் ரொக்க தொகை, அர்ஜூனன் சிலை, பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT