Published : 16 Jan 2025 12:54 AM
Last Updated : 16 Jan 2025 12:54 AM

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு அல்கராஸ், ஜோகோவிச் தகுதி

நோவக் ஜோகோவிச்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸும், ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷியோகாவும் மோதினர். இதில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அல்கராஸ் 6-0, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் நிஷியோகாவை எளிதாக வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான ஜோகோவிச் 6-1, 6-7 (4), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் ஜெய்மி ஃபரியாவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

பிறிதொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹக்கா, பிரான்ஸ் வீரர் ஹுகோ காஸ்டன் மோதினர். இதில் லெஹக்கா 6-3, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக ஹுகோ காஸ்டன் வெளியேறினார். இதையடுத்து லெஹக்கா வெற்றி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் செக் குடியரசு வீரர் தாமஸ் மச்சாக் 3-6, 7-6 (1), 6-7 (5), 7-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் ரெய்லி ஒபல்காவைுயம், பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஸி 6-2, 6-4, 3-6, 6-4 இத்தாலியின் பிரான்செஸ்கோ பசாரோவையும், போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்ப்ஸனையும், ஸ்பெயின் வீரர் ரொபர்ட்டோ கார்பலஸ் பயீனா 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தையும், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஃபில்ஸ் 6-2, 4-6, 7-6 (2), 7-5 என்ற கணக்கில் சகநாட்டு வீரரான குவென்டின் ஹாலிஸையும் தோற்கடித்தனர்.

சபலென்கா, ஜெஸிகா பெகுலா அபாரம்: மகளிர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் ஜெஸிகா பெகுலா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்ட்டென்ஸை சாய்த்தார்.

முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை ஜெஸிகா பவுசாஸ் மனேய்ரோவை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் செர்பிய வீராங்கனை ஓல்கா டேனிலோவிக் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் லுட்மிலா சாம்சனோவாவையும், டென்மார்க்கின் கிளாசா டவுசன் 6-2, 6-2 என்ற கணக்கில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவையும், போலந்து வீராங்கனை மக்டலேனா பிரெச் 0-6, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் அன்னா பிளின்கோவாவையும் வீழ்த்தினர்.

ஜெர்மனியின் லாரா சிஜ்முண்ட், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, ஜப்பானின் நவோமி ஒசா, கனடாவின் லெய்லா ஆனி பெர்னாண்டஸ், ரஷ்யாவின் டயானா ஷினைடர், அமெரிக்காவின் கோகோ காஃப், ரஷ்யாவின் அனஸ்டாசியா பாவ்லியுசென்கோவா ஆகியோரும் 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்திய ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்ஸின் அல்பனோ ஆலிவெட்டிஜோடி தோல்வி கண்டது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன், டிரிஸ்டன் ஸ்கூல்கேட் ஜோடி 6-2, 7-6 (3) என்ற செச் கணக்கில் யூகி பாம்ப்ரி, ஆலிவெட்டி ஜோடியை வீழ்த்தியது.

ஜோகோவிச் சாதனை: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் நேற்று தனது 430-வது ஒற்றையர் பிரிவு போட்டியை விளையாடி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 429 ஒற்றையர் போட்டிகளில் விளையாடி இருந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது ஜோகோவிச் முறியடித்துள்ளார். இந்த வரிசையில் பெடரருக்கு அடுத்தபடியாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (423 ஒற்றையர் ஆட்டங்கள்) உள்ளார்.

மேலும், இந்த போட்டியில் பட்டம் வென்றால், ஜோகோவிச்சுக்கு இது 11-வது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். அதுமட்டுமல்லாமல், இது அவருக்கு ஒட்டுமொத்தமாக 25-வது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டமாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x