Published : 13 Jan 2025 08:16 AM
Last Updated : 13 Jan 2025 08:16 AM
ஜோகன்னஸ்பர்க்: பெட்வே எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை டக்வொர்த் லீவிஸ் & ஸ்டெர்ன் விதிமுறையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி.
தென் ஆப்பிரிக்காவின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 141 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், போட்டி பல்வேறு கட்டங்களில் தடைபட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு நீண்ட நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 19 ஓவர்களில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இதையடுத்து 11.3 ஓவர்களில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக மீண்டும் களத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அந்த அணி டக்வொர்த் லீவிஸ் & ஸ்டெர்ன் விதிமுறையில் 6 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது. தொடர்ந்து பெய்த மழையால் வீரர்கள் களத்திற்கு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் & ஸ்டெர்ன் விதிமுறையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT