Published : 13 Jan 2025 07:53 AM
Last Updated : 13 Jan 2025 07:53 AM
மும்பை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை கேப்டனாக ரோஹித் சர்மாவே தொடர்வார் என்றும், அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில தொடர்களில் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மோசமாக உள்ளது. அவரது தலைமையிலான பல போட்டிகளில் தோல்வி கண்டது. மேலும் அவரது பேட்டிங்கும் மோசமாகியுள்ளது. இதுதொடர்பாக விமர்சகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டித் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை.
இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித்தை மாற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரை ரோஹித்தே இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்றும், அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
2024-ம் ஆண்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டது. இதில் 4 போட்டிகள் உள்நாட்டில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் நடத்துகிறது. இருந்தபோதும் இந்திய அணி, ஹைபிரிட் மாடலில் தனது போட்டிகளை ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் விளையாடவுள்ளது. ஒருவேளை இந்திய அணி அரை இறுதி, இறுதிக்கு முன்னேறினால் அந்த போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT