Published : 13 Jan 2025 07:44 AM
Last Updated : 13 Jan 2025 07:44 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு சபலென்கா, கேஸ்பர் ரூட் முன்னேற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பெலராஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நேற்று மெல்பர்னில் தொடங்கியது.

மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபென்ஸுடன் மோதினார். இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில் முதல்நிலை வீராங்கனையாக அரினா சபலென்கா களமிறங்கியுள்ளார்.

மற்ற போட்டிகளில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் செக் குடியரசு வீராங்கனை மேரி பவுஸ்கோவாவையும், சீன வீராங்கனை ஜெங் கின்வென் 7-6 (3), 6-1 என்ற செட் கணக்கில் ருமேனியா வீராங்கனை அன்கா அலெக்சியா தோடோனியையும் வீழ்த்தினர்.

இதேபோல் முதல் சுற்று ஆட்டங்களில் குரோஷிய வீராங்கனை டோனா வெகிக், ஜெர்மனியின் தட்ஜானா மரியா, ஸ்பெயினின் பவுலா படோசா, நெதர்லாந்தின் சுசான் லேமன்ஸ், கனடாவின் லெய்லா ஆனி பெர்னாண்டஸ், ஸ்பெயின் ஜெஸ்ஸிகா பவுசாஸ் மனேரியா, டென்மார்க்கின் கிளாரா டவுசன், ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட், ஸ்பெயின் வீரர் ஜவுமே முனாருடன் மோதினார். இதில் கேஸ்பர் ரூட் 6-3, 1-6, 7-5, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

இதேபோல் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஃபில்ஸ் 3-6, 7-6 (4), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஃபின்லாந்து வீரர் ஓட்டோ விர்டானெனை சாய்த்தார்.

மற்ற முதல் சுற்று ஆட்டங்கலில் கெய் நிஷிகோரி (ஜப்பான்), ஹாடி ஹபீப் (லெபனான்), பெட்ரோ மார்ட்டினஸ் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்திய வீரர் சுமித் நாகல் வெளியேற்றம்: ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி கண்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சுமித் நாகல், தாமஸ் மச்சாக்குடன் (செக் குடியரசு) விளையாடினார். இதில் தாமஸ் மச்சாக் 6-3, 6-1, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டார். இதையடுத்து சுமித் நாகல் முதல் சுற்றுடன் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x