Published : 11 Jan 2025 06:09 PM
Last Updated : 11 Jan 2025 06:09 PM
ஒவ்வொரு முறையும் அணியில் மூத்த வீரர்கள் வெளியேறி புதுமுக வீரர்கள் நுழையும் ‘மாறும்’ தருணங்களில் ஸ்டார் வீரர்களை நாயக வழிபாடு செய்யும் கலாச்சாரம் இந்திய கிரிக்கெட்டை சீரழித்து வருகிறது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரமான விமர்சனத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்தியாவில் வரலாறு காணாத நியூஸிலாந்துக்கு எதிரான 0-3 டெஸ்ட் தொடர் தோல்வி, உடனேயே ஆஸ்திரேலியாவில் 1-3 என்ற தோல்வி இவ்வாறு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது, இதற்கு அணியின் மூத்த அல்லது ஸ்டார் வீரர்களும் அவர்களைச் சுற்றியுள்ள நாயக பிம்பமுமே காரணம் என்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
இது குறித்து மஞ்சுரேக்கர் எழுதியுள்ள பத்தி ஒன்றில், “இந்திய அணியின் இன்றைய வீழ்ச்சிக்குக் காரணமாக ஒரேயொரு காரணத்தை அடையாளம் காட்ட முடியும் அது, நாயக பிம்ப வழிபாட்டு மனோபாவம். சில வீரர்களை வழிபடும் கிரிக்கெட் கலாச்சாரம். 2011-12 ஆக இருக்கட்டும் இப்போதாக இருக்கட்டும் அதுதான் நடந்து வருகிறது. தனது வாழ்நாள் கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டார் வீரர்கள் என்ன செய்தார்களோ அதற்கு நேர் எதிராக இப்போது செய்து வருகிறார்கள். இதனால் தங்களது மோசமான ஆட்டத்தினால் அணியை தாழ்வுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர்.
பெரிய வீரர்கள் என்று வரும்போது நாம் ஒரு நாடாக தர்க்கபூர்வமாக அறிவுபூர்வமாக சிந்திப்பதில்லை. உணர்ச்சிவயப்படுகின்றனர். இதனால் முடிவான தீர்மானத்தை எடுக்க வேண்டியவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அல்லது நாயக வழிபாட்டுக் கலாச்சாரத்தினால் அழுத்தப்படுகின்றனர். கிரிக்கெட் தர்க்கம் ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியப்படுகிறது. தேர்வுக் குழுவினர் என்ன நினைக்கின்றனர். ஸ்டார் வீரர்கள் அல்லது மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அவர்களே எடுக்கட்டும் என்று விட்டு விடுகின்றனர். லட்சக்கணக்கானோர் வழிபடும் வீரரின் கரியரை தாங்கள் முடித்து வைத்து அந்த ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக தேர்வாளர்கள் விரும்புவதில்லை.
ஒரு வீரரை நீக்குகிறோம் என்று சொல்லத் தயங்குகின்றனர். மாறாக ஓய்வு, காயம் என்றெல்லாம் கூறுகின்றனர். அதாவது, அந்த குறிப்பிட்ட வீரர் சரியாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கப்படுகிறார் என்று சொல்லும் விமர்சன வாய்ப்பை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் இழந்து விடுகின்றனர். இதன் மூலம் வீரரின் பிராண்ட் வேல்யுவைத் தக்க வைக்கின்றனர்.
ஓர் அணியில் தேர்வாளர்களின் தாக்கம் எத்தனை பெரியது. உண்மையில் பயிற்சியாளரை விட தேர்வுக்குழுவினர் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் ஆனால் இங்கு எதுவும் நடப்பதில்லை. நம் ஊடகங்கள் பயிற்சியாளர்களுக்கு தேவையில்லாத கவன ஈர்ப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்குகின்றனர்.
அஜித் அகார்க்கர் யார் வீரர் என்றெல்லாம் பார்க்காமல் முடிவுகளை எடுப்பாரா? நாம் இந்திய கிரிக்கெட்டை இத்தகைய வீரர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கப் பழக வேண்டும். ஆஸ்திரேலிய அணி ஒரு வீரர் ஓய்வு பெறும் வரை காத்திருப்பதில்லை. ஒரு வீரர் பெரும் சுமையாக மாறும் மும்பே அவரைக் கழற்றி விடுகின்றனர்,” என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT