Published : 11 Jan 2025 12:37 AM
Last Updated : 11 Jan 2025 12:37 AM

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 129 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், லியா பால் 73 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் பிரியா மிஷ்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

239 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 34.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 96 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், தேஜல் ஹசப்னிஸ் 46 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் விளாசினர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை (12-ம் தேதி) நடைபெறுகிறது.

அரை இறுதியில் சாட்விக்-ஷிராக் ஜோடி: கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது 24-வது இடத்தில் உள்ள மலேசியாவின் ஓங் யூ சின், தியோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 26-24, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி: புதுடெல்லி: நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்ஸின் அல்பனோ ஆலிவெட்டி ஜோடி, குரோஷியாவின் நிகோலா மெக்டிக், நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதியது. இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 1-6, 10-5 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அரை இறுதி வரை முன்னேறிய யூகி பாம்ப்ரி, அல்பனோ ஆலிவெட்டி ஜோடிக்கு 90 புள்ளிகள் வழங்கப்படும். மேலும் சுமார் பரிசுத் தொகையாக ரூ.8.72 லட்சம் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x