Published : 09 Jan 2025 08:10 PM
Last Updated : 09 Jan 2025 08:10 PM
கேப் டவுன்: அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் கீழ் கல்வி, விளையாட்டு உட்பட பெண்களுக்கான பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அணியுடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதை இங்கிலாந்து கிரிக்கெட் அணி புறக்கணிக்க வேண்டும் என அண்மையில் அந்த நாட்டின் அரசியல் பிரமுகர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்தச் சூழலில், அதே கருத்தை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தற்போது வலியுறுத்தியுள்ளார்.
“கிரிக்கெட் விளையாட்டு மூலம் இந்த உலகுக்கு, குறிப்பாக விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் நிறவெறி பேதம் அதிகம் இருந்த காலத்தில் விளையாட்டில் சமமான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் நான், இன்று உலகின் எந்தவொரு பகுதியிலும் பெண்களுக்கு எதிராக அதேபோன்ற அநீதி அரங்கேறும்போது, அதை வேறு விதமாகப் பார்ப்பது நியாயமானதாக இருக்காது.
தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு எடுப்பது நான் அல்ல. ஆனால், அந்த முடிவு என்னுடையதாக இருந்தால், அது நிச்சயமாக நடக்காது” என அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தலிபான் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளை மனசாட்சியின்றி அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் உடனான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும் என சொல்லி சுமார் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு லேபர் கட்சியின் எம்.பி டோனியா, 160 எம்.பி-க்கள் வலியுறுத்தி உள்ள கடிதத்தை அனுப்பி உள்ளார். பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதே காரணத்துக்காக ஆப்கானிஸ்தான் உடன் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடந்த காலங்களில் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள அதே குரூப் பிரிவில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி ஹைபிரிட் முறையில் பங்கேற்று விளையாடுகிறது. அதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT