Published : 27 Dec 2024 04:21 PM
Last Updated : 27 Dec 2024 04:21 PM
விராட் கோலி நேற்று தேவையில்லாமல் ஆஸ்திரேலிய அறிமுக இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மீது மோதி வம்பு செய்தார். அதற்காக கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய மீடியா இதை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது ஏன்? என்று ரவி சாஸ்திரி காட்டமாகச் சாடியுள்ளார்.
கான்ஸ்டாஸ் நேற்று அவருக்கு கொடுத்த பணியின் படி பும்ராவை ரிவர்ஸ் ஸ்கூப்கள், தூக்கி அடித்தல் என்று டி20 பாணியில் ஆடி ஆஸ்திரேலியாவின் பும்ரா பயத்தைப் போக்கியதில் அந்த அணியின் டாப் 4 வீரர்கள் 2022-க்குப் பிறகு அரைசதம் கண்டனர். இந்நிலையில்தான் பும்ராவுக்கே இந்த கதியா? என்று ஆவேசப்பட்ட விராட் கோலி சாம் கான்ஸ்டாஸ் மீது வந்து வேண்டுமென்றே மோதினார். அதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கவும் செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய மீடியாக்கள் இதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து ரவி சாஸ்திரி ஆஸ்திரேலிய ஊடகங்களைச் சாடும்போது கூறியதாவது: “ஆஸ்திரேலிய ஊடகங்களின் விரக்தியையே இது காட்டுகிறது, கோலியை டார்கெட் செய்வது தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த பின்பும் 1-1 என்று சமநிலையில் உள்ளது டெஸ்ட் தொடர். அவர்களுக்கு எப்படியாவது பார்டர் - கவாஸ்கர் டிராபியை வென்று விட வேண்டும் என்பதே குறி. ஆனால் 3 டெஸ்ட்கள் முடிந்த பிறகும் சமனாக இருப்பது மீடியாக்களுக்குப் பொறுக்கவில்லை. இன்னமும் கூட பார்டர்-கவாஸ்கர் டிராபி அவர்களுக்கானதாக இல்லை.
நான் ஆஸ்திரேலியாவுக்குப் பலமுறை வந்திருக்கிறேன். நாடே அணியின் பின்னால் நிற்கும். ரசிகர்கள் என்றில்லை, ஊடகங்கள்.. ஏன் அனைவருமே ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாக ஒன்று திரள்வார்கள். எனக்கு மீடியாக்கள் எழுதுவது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களின் விரக்தியின் விளைவே அது.
ஆனால் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 அல்லது 2-0 என்று முன்னிலைப் பெற்றிருந்தால் ஊடகங்கள் கோலியை டார்கெட் செய்யாது, தலைப்புகள் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு வரும் அணிகள் 7-8 ஆண்டுகளாகத் தொடரை வெல்வது சாத்தியமல்ல. அதனால் வெற்றி என்பது அவர்களுக்கு மிக மிக அவசியமானது. எனவே எதிரணியினரில் யாரையாவது ஒருவரை டார்கெட் செய்து கட்டம் கட்டுவது ஊடகங்களின் வேலை.
கோலியின் உடல் மோதல் இப்போது இவர்களின் விரக்திக்குக் காரணமாகியுள்ளது. ஆகா! இதுதான் எங்கள் வாய்ப்பு, இனி என்ன செய்கிறோம் பாருங்கள் என்பதுதான் ஆஸி. ஊடகங்களின் நடத்தையாக இருக்கும். இது வழக்கம்தான்.” என்று ரவி சாஸ்திரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT