Published : 27 Dec 2024 11:09 AM
Last Updated : 27 Dec 2024 11:09 AM

படுமோசமான கேப்டன்சி, பவுலிங்: ஆஸி.யிடம் மேட்சைத் தாரை வார்க்கும் ரோஹித் சர்மா!

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் காலை இந்திய அணியின் பந்து வீச்சு ஒன்றுமேயில்லாமல் சொத்தையாக இருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 139 ரன்களை விளாசி தன் 34-வது சதத்தை எடுத்து சுனில் கவாஸ்கர், பிரையன் லாராவை சமன் செய்ததோடு ஜோ ரூட்டையும் கடந்தார். ஆனால், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி படுமோசமாக அமைந்தது. 311/6 என்று இன்று காலை தொடங்கி குறைந்தது 400-க்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால், பிடியை நழுவ விட்டது ரோஹித் சர்மாவின் மந்தமான கேப்டன்சி.

ஆஸ்திரேலியா 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு ரோஹித் சர்மா தேவையில்லாமல் தொடக்கத்தில் இறங்கி அசிங்கமாக ஆட்டமிழந்து சென்றார். அதாவது ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே தன் வழியே செல்லும் கமின்ஸ் பந்து அது. ஒன்று அதை பின்னால் சென்று நேர் பேட்டில் தடுத்தாடியிருக்க வேண்டும், இல்லையேல் ஆடாமல் விட்டிருக்க வேண்டும், அப்படியே புல் ஷாட் ஆடினாலும் பின்னால் நன்றாகச் சென்று மிட்விக்கெட் மேல் அடிக்க வேண்டும், இதை எதுவும் செய்யாமல் அரை புல் ஷாட் ஆடி கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்து விட்டுச் சென்றார். இத்தகைய போக்கு அவர் மீது கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

பிட்சில் கொஞ்சம் முயற்சி செய்து வேகம் கூட்டி வீசி நல்ல லைன் மற்றும் லெந்தில் வீசினால் உதவி இருந்து வருகிறது. ஸ்பின்னுக்கும் கொஞ்சம் உதவிகரமாகவே உள்ளது. ஆனால் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜாவை வெறும் சேஞ்ச் பவுலராக, ஓவர்களை விரைவில் வீசும் நோக்கத்திற்குப் பயன்படுத்தியது போல் செய்தது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

கமின்ஸ் போட்டு சாத்துகிறார், ஸ்டீவ் ஸ்மித் பும்ராவை ஹூக் ஷாட்டில் சிக்ஸ் விளாசுகிறார், எதற்கும் எந்த வினையும் ஆற்றாத கேப்டனாக ரோஹித் சர்மா படுதண்டமாகச் செயல்பட்டார் என்பதே அவர் மீதான விமர்சனத்திற்குக் காரணம். ஆட்டம் தொடங்கி உணவு இடைவேளைக்கு முன்பு 27 ஓவர்களில் ஆஸ்திரேலியா 143 ரன்களை விளாசியது. ஒரு விக்கெட்டைத்தான் கைப்பற்ற முடிந்தது. அதுவும் கமின்ஸ் கொடுத்துவிட்டுச் சென்றது. ஆகாஷ் தீப், பும்ரா, சிராஜ் மூவருமே எந்த வித திட்டமுமின்றி களைப்பாக வீசியது போல் வீசினர்.

இந்நிலையில் உணவு இடைவேளையின்போது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி சாடியதாவது: “ஆகாஷ் தீப் பந்து வீச்சு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பவுன்சர் வீசினால் குறைந்தது ஹெல்மெட் பேட்ஜிற்கு வீச வேண்டும். இடுப்புயரத்திற்கு பவுன்சர் வீசினால் அது பயனற்றது.

நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன், ஐ ஆம் சாரி. புத்தம் புது பந்து விரயம் செய்யப்பட்டது. ஆகாஷ் தீப் படுமோசமாக வீசினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி பேட்டர்களை செட்டில் ஆகவிட்டார். பீல்டிங்கிலும் இந்திய வீரர்கள் சொதப்பினர்” என்றார் சுனில் கவாஸ்கர்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாகச் சாடிய ரவி சாஸ்திரி, “என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் கேப்டன்சி செய்தார். பந்து வீச்சு மிகமிக சாதாரணமாக இருந்தது. ஸ்பின்னை அதிகம் பயன்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் பயன்படுத்தவில்லை. வாஷிங்டன் சுந்தர் 40 ஓவர்கள் சென்று வருகிறார்.

எதற்காக 2 ஸ்பின்னர்களை ஆட வேண்டும். கேப்டனுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் எதற்காக அணியில் எடுக்க வேண்டும்? இந்திய அணியினரின் உடல் மொழி வெறுப்படைந்து சோர்வடைந்து காணப்பட்டது.” என்று சாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x