Published : 13 Dec 2024 02:33 PM
Last Updated : 13 Dec 2024 02:33 PM

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த டி. குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மிகச் சிறப்பாக திட்டமிட்டு, நடத்தப்பட்டன. அதில் பங்குபெற்று வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் தமிழக முதல்வர் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசுகளை வழங்கினார். தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழகத்தைச் சேர்ந்த டி. குகேஷ் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார்.

மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த டி. குகேஷுக்கு, முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்ததோடு, தொலைபேசி வாயிலாகவும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, டி. குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x