Published : 13 Dec 2024 10:28 AM
Last Updated : 13 Dec 2024 10:28 AM
சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற நடப்பு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ்.
தமிழ் சினிமாக்களில் வருவது போல கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் ஆனார். அவரது வெற்றி குறித்து ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
“வியாழன் அன்று அந்த பையன் சாம்பியன் பட்டத்தை வென்றதை நான் கண்டேன். அவரை நான் அப்படி அழைக்கவே விரும்புகிறேன். ஏனெனில், நான் முதல் முறை உலக சாம்பியன் பட்டம் வென்றபோது அவர் பிறக்கவே இல்லை. 18 வயதான அவர், தற்போது 18-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்றுள்ளார். அவரது அமைதி மற்றும் தன்னம்பிக்கை இந்த விளையாட்டின் வருங்காலமாக இருக்கும்.
14-வது சுற்றில் அவர் வெற்றி பெற்றது எனக்கு ஆச்சரியம் அளித்தது. எல்லோருமே இறுதி சுற்று டிராவில் முடியும் என எதிர்பார்த்திருந்தனர். இறுதிவரை தனது முயற்சியை தொடர்ந்த குகேஷின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி இது. அதே நேரத்தில் குகேஷ் தனது திட்டத்தில் உறுதியாக இருந்தார். அது அவரது ஆட்டத்தில் வெளிப்பட்டது. பின்னடைவை எதிர்கொண்டாலும் அதை எதிர்த்து நின்றார். அவரது அணுகுமுறை எனக்கு பிடித்துள்ளது.
டிங் லிரென் ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 14 சுற்றிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். 12-வது சுற்றில் அவரது வெற்றி என்னை ஈர்த்தது. கடைசி சுற்று ஆட்டத்தில் திடீரென டிங் லிரென் தவறு செய்தார். இறுதியில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான அந்த எட்ஜ் குகேஷ் வசம் இருந்தது.
வெற்றிக்கு பிறகு உணர்ச்சி பெருக்கில் குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியான தருணம். நாம் ஒவ்வொருவரும் இது மாதிரியான தருணங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். நானும் எனது காலத்தில் இதே மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளேன். அவர் அதை வெளிப்படையாக செய்ததை பார்த்து மகிழ்ந்தேன்.
செஸ் வரலாற்றில் இளம் சாம்பியன் என்ற மகத்தான சாதனையை குகேஷ் படைத்துள்ளார். தற்போது தனது ஆட்டத்தை அவர் அனுபவித்து விளையாட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT