Published : 09 Dec 2024 05:00 PM
Last Updated : 09 Dec 2024 05:00 PM
பெர்த் டெஸ்ட் போட்டியில் மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகு, உளவியல் ரீதியாக வலுவாக வேண்டிய இந்திய அணி, சுணங்கி தோல்வி அடைந்துள்ளது. அதேநேரத்தில், சுணங்கி தோல்வி அடைய வேண்டிய ஆஸ்திரேலிய அணியோ வலுவாக மீண்டெழுந்துள்ளது. இது, இந்திய அணியின் அபாயத்துக்கான முதல் அறிகுறி.
இந்திய பேட்டர்கள் பெர்த் டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்தது, பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் முழுதும் நீடிக்கும் என்று மனப்பால் குடித்த ரசிகர்களுக்கு, ஆஸ்திரேலிய பவுலர்களை விட அதிக அதிர்ச்சியளித்தது இந்திய பேட்டர்களின் அணுகுமுறைதான்!
அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு நல்ல டெஸ்ட் க்ளாஸ் பேட்டர்களாக இருந்தால், பவுண்டரிக்கு விரட்டியிருக்க வேண்டிய ஆஃப் வாலி பந்துகளில் பவுல்டும், எல்.பி.யும் ஆவது இவர்களை எந்த அளவுக்கு டி20 போட்டிகள் மாற்றி விட்டன என்பதைக் காட்டுகிறது. அதுவும் ரோஹித் சர்மா, கேட்கவே வேண்டாம். தடுப்பாட்டம் சுத்தமாக வரவில்லை.
முதல் இன்னிங்ஸில் ஆஃப் வாலியில் போலண்டிடம் எல்.பி.என்றால், 2-வது இன்னிங்ஸிலோ கால்கள் நகராமல் கிரீஸில் நின்றபடியே ஸ்டம்பை மட்டும் கவர் செய்து பந்தை லீவ் செய்யத் தெரியாமல் எட்ஜ் ஆனார். அவரது பேட்டிங் உத்தியில் கடும் கோளாறுகள் உள்ளன. இந்த வயதில் அதையெல்லாம் சரி செய்ய முடியாது. அவர் விலகி விடுவது நல்லது என நினைக்க வைக்கிறது.
மேலும், பும்ராவின் கேப்டன்சி ஆக்ரோஷமாக கச்சிதமான கள வியூகங்களுடன் அட்டாக்கிங் ஆக இருந்தது. ஆனால், ரோஹித் சர்மாவோ பழைய மாதிரி கள வியூகத்தைத் தள்ளித் தள்ளி அமைப்பது, அணித் தேர்வில் தேவையில்லாமல் வாஷிங்டனைத் தூக்கி விட்டு அஸ்வினைக் கொண்டு வந்தது என தப்பும் தவறுமாக கேப்டன்சி செய்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் உண்மையில் தோனியின் கேப்டன்சி போதாமையின் இன்னொரு வடிவமாகத் திகழ்கிறார் ரோஹித் சர்மா.
திருந்தாத விராட் கோலி: பெர்த்தில் 2-வது இன்னிங்ஸில் சதம் எடுத்தவுடன், “ஆ... ஊ... இனி அவ்வளவுதான்... ஆஸ்திரேலியா காலி” என்றெல்லாம் சில ஊடகங்கள் துள்ளி குதித்தன. ஆனால், ஆஸ்திரேலியா என்ன சாதாரண அணியா? அடிலெய்டில் கோலியை அவருக்கு ஆசைகாட்டியே வீழ்த்தி விட்டனர். இதைக்கூட புரிந்துகொள்ளாத ஈகோயிஸ்டாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே முக்கால் லெந்த் பந்தை பேட்டில் ஆடியே தீருவேன் என்று மட்டையைக் கொண்டு போய், அதன் மேல் தொங்க விடுகிறார்.
முதல் இன்னிங்ஸில் பந்தை ஆடாமல் விடுவதான முடிவை தாமதமாக எடுக்க எட்ஜ் ஆகி வெளியேறினார் கோலி. 2-வது இன்னிங்ஸில் ஸ்காட் போலண்ட் போன்ற பவுலர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்துப் பிறகு, அதே ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே 4-வது ஸ்டம்ப் பந்து என்னும் கோலியின் நிரந்தரக் காதலி கோலியின் பேட்டை இழுக்கத் தொட்டார்... கெட்டார். ஏன் இதை அவர் உணர்வதில்லை.
திராவிட் இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் அவரை ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை தொடாமல் ஆடச் செய்தார். கம்பீருக்கும் பயிற்சிக்கும் ரொம்ப தூரம் என்பதால் அவரால் கோலியை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது இவரே அதை உணர்ந்து, வரும் மேட்ச்களில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்து என்னும் காதலியின் அழைப்பை நிராகரித்து பொறுப்புடன் ஆட வேண்டும்.
ஆகவே, சீனியர் வீரர்களை விடுத்து ரிஷப் பண்ட், கில், ஹர்ஷித் ராணா சரியில்லை என்று கூறினால், அது மிக மிக அநீதியாகும். இந்த கும்பல்தான் புஜாராவை ஒன்றுமில்லை என்று ஒதுக்குகிறார்கள். ரஹானே முடிந்து விட்டார் என்று தீர்ப்பெழுதுகிறார்கள். ஸ்ரேயஸ் அய்யர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கிறார்கள். கருண் நாயருக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள். இப்போது சர்பராஸ் கானை வடிவேலு பட காமெடியில் வருவது போல் ‘ஊஹூம் இவர் அதுக்கு சரியா வரமாட்டார்’ என்று ஓரங்கட்டி வைத்திருக்கின்றனர்.
ரோஹித் சர்மா இந்தத் தொடரில் எப்போது முதல் டெஸ்ட்டில் ஆடவில்லையோ, அதையே அப்படியே கடைப்பிடித்திருக்க வேண்டும். திடீரென அணிக்குள் நுழைந்து அணியின் தன்னம்பிக்கை, கட்டுக்கோப்பு, ஆக்ரோஷம் ஆகியவற்றுக்கு பெரிய இடையூறு இழைத்து வருகிறார்.
ஆஸ்திரேலிய பவுலர்கள் பிங்க் பந்தில் நிறைய ஆடுகின்றனர். இந்திய அணி ஜெய்ஷாவின் வருகைக்குப் பிறகே பிங்க் பந்தை மறந்துவிட்டனர். ஆனால் இவையெல்லாம் சாக்குப் போக்குகளே. உண்மையில், இந்திய சீனியர் பேட்டர்களின், பொதுவாக பேட்டர்களின் அணுகுமுறை மிக மிக தவறாக உள்ளது. உத்தி ரீதியாகவும் தவறு, பொறுமைகாக்க முடியாத அர்த்தமற்ற ஆக்ரோஷமும் தவறு.
இப்போது ஒருவிதமாக ஆஸ்திரேலியா கண்டு கொண்டுவிட்டது. அவர்களிடமும் பேட்டிங் இல்லை, அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட்டை விரைவில் வீட்டுக்கு அனுப்பியிருந்தால் அவர்களும் 235 ரன்கள்தான். அதனால் அவர்கள் இனி அடிலெய்டு பிட்ச் போன்று ஒருமாதிரி ட்ரை கிராஸ் மற்றும் சற்றே பவுன்ஸ் என்ற வழிமுறைக்குத்தான் திரும்புவார்கள். ஏனெனில், பேட்டிங் பிட்சைப் போட்டாலும் இந்திய பேட்டர்கள் இனி ஒருபோதும் 450 - 500 அடிக்கப் போவதில்லை. ஆகவே, ஸ்டீவ் வாஹ் பாணிக்குத் திரும்பி விடுவார் பாட் கமின்ஸ்.
அதாவது, கொஞ்சம் முயற்சி செய்து வேகமாகப் போட்டால் நல்ல லைன் அண்ட் லெந்த், டைட் என்று முடக்கினால் இந்திய பேட்டர்கள் காலி. இதற்கு பிட்ச் உதவி ஒன்றும் பெரிய தேவையில்லை என்று முடிவுக்கு வருவார்கள். மேலும், இப்படிப்பட்ட பிட்ச்களில் அவர்கள் பேட்டிங்கில் யாரேனும் ஒருவர் பெரிய சதம் எடுக்க வாய்ப்பிருக்கும்போது நிச்சயம் பிரிஸ்பனினும் பெர்த் போன்று அதிபவுன்ஸ் பிட்ச் ஆகப் போட மாட்டார்கள்.
அதாவது, பந்து நன்றாகச் செல்லும், போதிய பவுன்ஸ் இருக்கும். அவ்வளவே பெர்த் போன்று வேகப்பந்துகளில் அந்த 'zip' இருக்காது. அது, இருந்தால் இந்திய பவுலர்களை அவர்களால் ஆட முடியவில்லை. மாறாக, இந்திய பேட்டர்களுக்கு ஆஃப் வாலி, ஃபுல் லெந்த்தாக வீசினாலும் விக்கெட், அவ்வப்போது ஷார்ட் பிட்ச் பந்துகளையும் வீசி ஒருமாதிரி செட்டில் ஆகவிடாமல் செய்யும் பிட்ச்களையே போடுவார்கள்.
இதற்கு ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி தயாராகி, ஒழுங்காக பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி, அவர்களின் பவுலர்களை களைப்படையச் செய்வதுதான் ஒரே வழி. இதைச் செய்தால் தொடரில் ஏதேனும் தேற வாய்ப்புள்ளது. இல்லையெனில் 4-1 என்ற உதை காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT