Published : 09 Dec 2024 11:10 AM
Last Updated : 09 Dec 2024 11:10 AM

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்: ஷாகித் அப்ரிடி

கராச்சி: இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்றும், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்தவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வலியுறுத்தி வருகிறது. எனவே, ஹைபிரிட் மாடல் வகையில் போட்டி நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதாவது இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நடுநிலையான மைதானங்களில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, போட்டியின் அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கராச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஷாகித் அப்ரிடி கூறியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வலுவாகவும், தன்னிறைவாகவும் இருக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து வலுவான கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதற்கான முடிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) எடுத்து அதன் அடிப்படையில் உறுதியாக செயல்பட வேண்டும். பாகிஸ்தான் நாட்டுக்கு வந்து, இந்தியா வந்து விளையாட முடியாவிட்டால், நமது அணியும் இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்கக் கூடாது. அந்த போட்டிகள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் வாரியத்துக்கு புதிய தலைவர் வரும்போது கொள்கைகள் மாறுகின்றன. அதனால் அணிக்குள் பல பிரச்சினைகள் நிகழ்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x