Published : 06 Dec 2024 04:02 AM
Last Updated : 06 Dec 2024 04:02 AM

அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணிக்கு பதிலடி கொடுக்குமா ஆஸி.?

அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து அசத்திய நிலையில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா 8 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா செயல்பட்டிருந்தனர்.

வாஷிங்டன் சுந்தர், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்கினர். இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்குவது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். பெர்த் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் தொடக்க பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் அவர், அதே இடத்தில் களமிறங்குவார் என நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ரோஹித் உறுதிப்படுத்தினார். இதனால் ரோஹித் சர்மா நடுவரிசையில் களமிறங்க உள்ளார்.

மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அவரும், விளையாடும் லெவனில் இடம் பெறக்கூடும். இதனால் தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல் ஆகியோர் வெளியே அமரவைக்கப்படுவார்கள். கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்து இருந்தது. ஆனால் இம்முறை தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளதால், மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் இந்திய அணி வீரர்கள் தீவிரம் காட்டக்கூடும்.

விராட் கோலி பார்முக்கு திரும்பி உள்ளதால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். மேலும் ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளிக்கக்கூடும். இந்திய அணியின் பந்து வீச்சு துறையில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. அநேகமாக அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இம்முறையும் வெளியே அமரக்கூடும்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பெர்த் மைதானத்தில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. சொந்த மண்ணில் 12 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 10 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. எனினும் தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளதால் அந்த அணிக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தக்கூடிய ஜோஷ் ஹேசில்வுட் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் களமிறங்க உள்ளார். ஸ்காட் போலண்ட் 18 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். ஆஃப் ஸ்டெம்ப் திசையை குறிவைத்து தொடர்ச்சியாக சீராக வீசுவதில் போலண்ட் சிறப்பாக செயல்படக்கூடியவர். இதனால் அவர், இந்திய டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

பெர்த் டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம் அளித்த நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் ஆகியோர் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். அதேவேளையில் அறிமுக போட்டியிலேயே தாக்கம் ஏற்படுத்தத் தவறிய மெக்ஸ்வீனி, ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அணியில் தனது இடத்தை தக்கவைக்க வேண்டுமானால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறார் மெக்ஸ்வீனி.ஸ்காட் போலண்ட் சேர்க்கையை தவிர ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் இல்லை என்பதை பாட் கம்மின்ஸ் நேற்று உறுதிப்படுத்தினார். பகலிரவு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்தின் தையல் வலுவானதாக காணப்படும். மேலும் பளபளப்பும் கூடுதலாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் இருக்கும். மேலும் அந்திப்பொழுது ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த கட்டத்தில்தான் அதிக விக்கெட்கள் சரியும். அந்திப் பொழுதிலும், மின்னொளியிலும் பேட்ஸ்மேன்கள் சாதுர்யமாக செயல்பட்டால் சீராக ரன்கள் சேர்க்கலாம்.

‘வெற்றியை விரும்புகிறோம்’: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “நாங்கள் முடிவை விரும்புகிறோம், வெற்றியை விரும்புகிறோம். பெர்த் மைதானத்தில் யஷஸ்வி ஜெஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்தனர். கே.எல்.ராகுல் பேட்டிங் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. இந்த நேரத்தில் அவர், அந்த தொடக்க வீரராக களமிறங்க தகுதியானவர். இப்போது அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை, எதிர்காலத்தில் விஷயங்கள் வித்தியாசமாக இருக்கலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு பேட்டிங் வரிசையில் கீழே செல்வது எளிதானது அல்ல, ஆனால் அணிக்கு இது நிறைய அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்றார்.

நேரம்: காலை 9.30, நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x