Published : 24 Nov 2024 03:35 AM
Last Updated : 24 Nov 2024 03:35 AM
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் விளாசிய 90 ரன்கள் மற்றும் கே.எல்.ராகுல் சேர்த்துள்ள 62 ரன்கள் உதவியுடன் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது.
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நித்திஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல 26 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். இதனால் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 19, மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 51.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அலெக்ஸ் கேரி 31 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய நேதன் லயன் 5 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் நடையை கட்டினார். நிலைத்து நின்று விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 112 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்டுடன் இணைந்து 25 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 18 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியிருந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 5, ஹர்ஷித் ராணா 3, முகமது சிராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி அற்புதமான தொடக்கம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் தளர்வான பந்துகளுக்காக காத்திருந்தும், நல்ல வேகப்பந்து வீச்சை மதித்தும் பழைய பாணியிலான டெஸ்ட் போட்டி பேட்டிங்கை கையாண்டனர். வலுவான தடுப்பாட்டத்தால் இந்த ஜோடி 2-வது செஷனில் 31 ஓவர்களில் 88 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து கடைசி செஷனில் ஆடுகளத்தின் மேற்பரப்பில் இருந்த புற்களில் உயிரோட்டம் காணப்படவில்லை. இதனால் பந்தில் சீம் நகர்வு இல்லாமல் போக ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு கைகொடுக்கத் தொடங்கியது. இதை ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுல் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 122 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் தனது 9-வது அரை சதத்தையும், கே.எல்.ராகுல் 124 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் தனது 16-வது அரை சதத்தையும் கடந்தனர்.
இந்த ஜோடி தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஷாட் பால் மற்றும் ஃபுல் லெந்த்தில் வீசி விக்கெட்களை கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால் அவற்றை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரன் வேட்டை நிகழ்த்தினர். மிட்செல் ஸ்டார்க் வீசிய 47-வது ஓவரின் முதல் பந்தை டீப் பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார் ஜெய்ஸ்வால். தொடர்ந்து அவர், நேதன் லயன் வீசிய 52-வது ஓவரின் 4-வது பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
ஆஸ்திரேலிய அணி 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்த போதிலும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 57 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 193 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்களும், கே.எல்.ராகுல் 153 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 10 விக்கெட்கள் இருக்க 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
77 ஆண்டுகளுக்குப் பிறகு...: பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சொந்த மண்ணில் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 1947-ம் ஆண்டு இந்திய அணிக்கு எதரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது.
கபில் தேவ் சாதனை சமன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 18 ஓவர்களை வீசி, 6 மெய்டன்களுடன் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர், 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 11-வது முறையாகும்.
அதேவேளையில் சேனா (SENA) நாடுகளில் அவர், 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 7-வது முறையாகும். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவையே கிரிக்கெட்டில் சேனா (SENA) நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்திய வீரர்களில் இதற்கு முன்னர் சேனா நாடுகளில் கபில் தேவ் மட்டுமே 7 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்த சாதனையை தற்போது பும்ரா சமன் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT