Published : 15 Nov 2024 08:29 AM
Last Updated : 15 Nov 2024 08:29 AM
புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் - மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி முதல் இன்னிங்ஸிஸ் 19 ஓவர்களை வீசி 4 மெய்டன்களுடன், 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் 90 டாட் பால்கள் வீசியிருந்தார். அத்துடன் 57 ஓவர்கள் பீல்டிங் செய்தார். 2-வது இன்னிங்ஸிலும் ஷமி 15 முதல் 19 ஓவர்கள் வரை வீசும் பட்சத்தில் சிறப்பானதாக அமையக்கூடும்.
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது காலில் காயம் அடைந்த ஷமி அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்த நிலையில் ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது அவர், காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் உடற்குததியை நிரூபிக்கும் வகையில் ரஞ்சி கோப்பையில் பங்கேற்றுள்ளார். அவர், ஆட்டமிழக்கச் செய்த 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் போல்டானார்கள். ஒருவர் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.
ஷமியின் செயல் திறன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணிக்கு நல்ல தகவலாக அமைந்துள்ளது. எனினும் இந்தூர் போட்டியின் முடிவில் ஷமியின் உடல் தகுதி எவ்வாறு உள்ளது, காலில் ஏதேனும் வீக்கம் அல்லது வலி இருக்கிறதா என்பதையும் தேசிய தேர்வுக் குழு கவனிக்கும் என்று தெரிகிறது. இதை ஷமி கடக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க வாய்ப்பு உள்ளது.
அங்கு அந்த அணிக்கு எதிராக நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் ஷமி, பும்ராவுடன் இணைந்து பந்துவீசக்கூடும். மத்திய பிரதேச அணிக்கு எதிரான ஆட்டம் 16-ம் தேதி முடிவடைகிறது. இதன் முடிவில் ஷமி முழு உடற்தகுதியை பெறும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக (நவ.22-ம் தேதி) இந்திய அணியுடன் இணைவார். எனினும் அவர், முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
ஷமி, ஆஸ்திரேலியா சென்றடையும் பட்சத்தில் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் நடைபெற உள்ள இரு நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடக்கூடும். இந்த பயிற்சி ஆட்டம் நவம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 6-ம் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT