Published : 10 Nov 2024 10:01 AM
Last Updated : 10 Nov 2024 10:01 AM
கெபெர்ஹா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கெபெர்ஹா நகரில் இன்று இரவு நடைபெற உள்ளது.
இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 203 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியால் டி20 தொடரில் இந்திய அணி 1-0 எனமுன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கெபர்ஹொ நகரில் இரு அணிகளும் மோதுகின்றன.
முதல் ஆட்டத்தில் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அதேவேளையில் அபிஷேக் சர்மா மீண்டும் ஒரு முறை நெருக்கடியுடன் களமிறங்குகிறார். கடந்த 7 ஆட்டங்களில் 66 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள அவர், அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
இதேபோன்று முதல் ஆட்டத்தில் 18 பந்துகளில் 33 ரன்கள் விளாசிய திலக் வர்மா, சிறப்பாக விளையாடிய நிலையில் அதை பெரிய அளவிலான ரன் குவிப்பாக மாற்றத் தவறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவும் எளிதான முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் ஆகியோரும் இறுதிக்கட்ட ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியிருந்தனர்.
ஒட்டுமொத்தமாக இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கூட்டாக 36 ரன்களையே சேர்த்திருந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணிய 2 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொண்டு 36 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை தாரைவார்த்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
பந்து வீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தது. அதிரடி பட்டாளங்கள் நிறைந்த தென் ஆப்பிரிக்காவை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் 17.5 ஓவர்களிலேயே 141 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்த வருண் சக்கரவர்த்தி இம்முறையும் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட ரவி பிஷ்னோயும் 3 விக்கெட்களை வீழ்த்தி பலம் சேர்த்தார்.
இவர்கள் இருவரும் ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்த போதிலும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை வெகுவாக கட்டுப்படுத்தினர். அதேவளையில் வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கினர். இன்றைய ஆட்டத்திலும் இந்திய பந்து வீச்சு குழுவினர், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் வெற்றியை வசப்படுத்தலாம்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி தற்போது இருதரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்து உள்ளது. குயிண்டன் டி காக், ரபாடா, அன்ரிச் நோர்க்கியா, தப்ரை ஸ்ஷம்ஸி ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடவில்லை. இதனால் அனுபவ வீரர்கள் இல்லாமல் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறி வருகிறது.
இதனால் இன்றைய போட்டியும் அவர்களுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கக்கூடும். சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது மேற்கிந்தியத் தீவுகளிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து இருந்தது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்க வேண்டுமானால் கேப்டன் எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசன் உள்ளிட்ட மூத்த வீரர்களிடமிருந்து மேம்பட்ட செயல்திறன் வெளிப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT