Published : 31 Oct 2024 12:11 PM
Last Updated : 31 Oct 2024 12:11 PM
சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது.
சட்டோகிராமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 81 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் 33, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். டோனி டி ஸோர்ஸி 141, டேவிட் பெடிங்ஹாம் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 144.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்த நிலையில் முதல்இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. டோனி டி ஸோர்ஸி 269 பந்துகளில்,4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 177 ரன்கள் விளாசிய நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். டேவிட் பெடிங்ஹாம் 78 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் போல்டானார்.
இதையடுத்து களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன் 12, கைல் வெரெய்ன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் வெளியேறினர். 7-வதுவிக்கெட்டுக்கு இணைந்த வியான்முல்டர், சீனுரன் முத்துசாமி ஜோடி அதிரடியாக விளையாடியது. வியான் முல்டர் 150 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை விளாசினார். சீனுரன் முத்துசாமி 62 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.
வியான் முல்டர் 105 ரன்களும், சீனுரன் முத்துசாமி 68 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. ஷத்மான் இஸ்லாம் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.
மஹ்முதுல் ஹசன் ஜாய் 10 ரன்களில் பேட்டர்சன் பந்தில் நடையை கட்டினார். ஜாகிர் ஹசன் 2 ரன்களிலும், ஹசன் மஹ்முத் 3 ரன்களிலும் வெளியேறினர். மொமினுல் ஹக் 6, கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ராபாடா 2 விக்கெட்களை வீழ்த்தினார். பேட்டர்சன், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 537 ரன்கள் பின்தங்கியுள்ள வங்கதேச அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. உணவு நேர இடைவேளைக்கு முன்பு 8 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT