Published : 30 Oct 2024 02:55 PM
Last Updated : 30 Oct 2024 02:55 PM
1976-ம் ஆண்டு ஜான் பார்க்கர் தலைமையிலான நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு இளம் முஷ்டாக் முகமது கேப்டனாக இருந்தார். ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என்று கைப்பற்றிய பிறகு ‘பிரவுன் வாஷ்’ ஆகாமல் தப்பிக்க நியூஸிலாந்து பிரயத்தனப்பட்டு டிரா செய்த கராச்சி டெஸ்ட் ஆகும் இது.
கராச்சி மட்டைப் பிட்சில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. நியூஸிலாந்து பவுலிங்கை ஏப்பை சோப்பை என்று கூற முடியாது, ஏனெனில் ரிச்சர்ட் கொலின்ஞ், ரிச்சட்ர்ட் ஹாட்லி, கிறிஸ் கெய்ன்ஸின் தந்தை லான்ன்ஸ் கெய்ன்ஸ் கொண்ட பந்து வீச்சைக் கொண்டிருந்தது.
ஆனால், பாகிஸ்தானின் இன்று வரையிலான சிறந்த தொடக்க வீரர் மாஜித் கான் அன்று என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை. 74 பந்துகளில் சதம் விளாசினார். அதுவும் உணவு இடைவேளைக்கு முன்பாகவே சதம் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையோடு ஆஸ்திரேலிய வீரர்களுக்குப் பிறகு துணைக்கண்டத்தில் இருந்து இந்த சாதனையை நிகழ்த்தி அசத்தினார் மாஜித் கான்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்டர் ட்ரம்ப்பர், சார்ல்ஸ் மெக்கார்ட்னி மற்றும் ஆல் டைம் கிரேட் டான் பிராட்மேன் ஆகியோர்தான் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் படைத்தனர், இந்த டெஸ்ட்டில் மாஜித் கான் ஆஸ்திரேலியர் அல்லாத வீரராக அதே சாதனையைப் புரிந்தார். ஒரு சேவாக் ரக இன்னிங்ஸை ஆடினார் மாஜித். சேவாக் ஒருமுறை மேற்கு இந்தியத் தீவுகளில் உணவு இடைவேளைக்கு முன் 99 எடுத்தார். அவருக்கு யாரும் அப்படி ஒரு சாதனை இருப்பதாகக் கூறவில்லை என்று பின்னால் காரணம் கூறினார் சேவாக்.
மாஜித் கான் 18 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 112 ரன்களை எடுக்க முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்ட முடிவில் ஜாவேத் மியாண்டட் 110 நாட் அவுட், முஷ்டாக் முகமது 73 நாட் அவுட். மறுநாள் ஜாவேத் மியாண்டட் இரட்டைச் சதம் எடுத்து 29 பவுண்டரிகளுடன் 206 ரன்களையும் முஷ்டாக் முகமது 107 ரன்களையும் எடுக்க இம்ரான் கான் 59 விளாச பாகிஸ்தான் 105.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரிச்சர்ட் ஹாட்லி ஒரு பெரிய பவுலர். அன்றே பாகிஸ்தானின் பாஸ்பாலில் சிக்கி 20 ஓவர்களில் 138 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து இம்ரான், சர்பராஸ் நவாஸ் மற்றும் இண்டிகாப் ஆலமிடம் சிக்கி 6 விக்கெட்டுகளில் 196 ரன்கள் என்று ஃபாலோ ஆன் அபாயத்தில் இருந்தது. ஆனால் அங்குதான் நியூஸிலாந்தின் போராட்டக் குணம் தெரியவந்தது. வாரன் லீஸ் என்ற விக்கெட் கீப்பர் 152 ரன்களை எடுத்து மாரத்தான் இன்னிங்ஸை ஆடினார். அப்போதெல்லாம் பாகிஸ்தானின் அம்பயரிங் என்பது இன்னொரு 2 பவுலர்களுக்குச் சமம், கையை உயர்த்தி விடுவார்கள். அதையும் மீறி வாரன் லீஸ் 152 ரன்களை விளாச ரிச்சர்ட் ஹாட்லி 87 ரன்களை எடுக்க, லான்ஸ் கெய்ன்ஸ் அதிரடி அரைசதம் விளாச நியூஸிலாந்து 468 ரன்களை எடுத்தது. நியூஸிலாந்து ஆல் அவுட் ஆனது 4-ம் நாளில்.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் மீண்டும் ஒரு பாஸ்பால் ஆட்டத்தை அதிரடியாக ஆட 47 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ரன்கள் என்று 6.10 என்ற ரன் ரேட்டில் குவித்து டிக்ளேர் செய்தது. மாஜித் கான் மீண்டும் அதிரடி அரைசதம் காண, ஜாவேத் மியாண்டட் 85, கேப்டன் முஷ்டாக் முகமட் 67 என்று பின்னி எடுத்தனர்.
ஆனால் மீண்டும் நியூஸிலாந்து ‘பிரவுன் வாஷ்’ ஆகாமல் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி கடைசி நாளன்று தாக்குப் பிடித்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் என்று ட்ரா செய்தது. வேடிக்கை என்னவெனில் ஜாவேத் மியாண்டட் பந்து வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுதான். ஆனால், இந்தப் போட்டி மாஜித் கான் இதே தேதியில் அப்போது உணவு இடைவேளைக்கு முன்பாக எடுத்த 74 பந்து சதத்திற்காக நினைவில் கொள்ளத் தக்கதாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT