Published : 30 Oct 2024 07:34 AM
Last Updated : 30 Oct 2024 07:34 AM
சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சதம் விளாசினார்கள்.
சட்டோகிராமில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி களமிறங்கினார்கள். நிதானமாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 55 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில், மொமினுல் ஹக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனி டிஸோர்ஸியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். அபாரமாக விளையாடிய இருவரும் தங்களது முதல் சதத்தை விளாசினர். டோனி டி ஸோர்ஸி 146 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். அதேவேளையில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 194 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார்.
2-வது விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்த இந்த ஜோடியை தைஜூல் இஸ்லாம் பிரித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 198 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் போல்டானார். இதையடுத்து டேவிட் பெடிங்ஹாம் களமிறங்கினார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 81 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி 211 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 141 ரன்களும், டேவிட் பெடிங்ஹாம் 18 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது தென் ஆப்பிரிக்க அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT