Published : 29 Oct 2024 05:30 PM
Last Updated : 29 Oct 2024 05:30 PM

39,969 ரன்கள், 4,204 விக்கெட்டுகள், 52 வயதில் டெஸ்ட் - யார் இந்த வில்ஃப்ரெட் ரோட்ஸ்?

இங்கிலாந்தின் மிகப் பெரிய ஆல்ரவுண்டராக இன்று வரை கருதப்படும் வில்ஃப்ரெட் ரோட்ஸ் அக்டோபர் 29-ம் தேதி, 1877-ல் யார்க்‌ஷயரில் பிறந்தார். இவர் வலது கை பேட்டர். ஆனால் இடது கை ஸ்லோ ஸ்பின்னர். யார்க்‌ஷயர் பெற்றெடுத்த கிரிக்கெட் வைரம் என்று இவரை அழைக்கலாம். யார்க்‌ஷயருக்காக மட்டுமே 30,000 ரன்களை எடுத்துள்ளார்.

58 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வில்ஃப்ரெட் ரோட்ஸ் 2,325 ரன்களில் 2 சதங்கள், 11 அரைசதங்களுடன், 30.19 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 179. 60 கேட்ச்களையும் எடுத்துள்ளார். இவரது கணக்கில் ஒரேயொரு சிக்ஸ் உள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் இவர் ஆடிய போட்டிகள் நம்மை வாய்பிளக்கச் செய்யும் சாதனையாகும். 1,110 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 39,969 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 267 நாட் அவுட். மொத்தம் 58 சதங்கள் 197 அரைசதங்கள். 765 கேட்ச்கள்.

58 டெஸ்ட் போட்டிகளில் 127 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். இவரின் சிறந்த பந்து வீச்சு 68 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள். முதல் தர கிரிக்கெட்டில் 1,110 போட்டிகளில் 4,204 விக்கெட்டுகள். சிறந்த பந்து வீச்சு 24 ரன்களை மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகள். தனது கிரிக்கெட் பேட்டிங் கரியரை 11ம் எண் வீரராகத் தொடங்கி பிறகு தன் அபாரத் திறமையினாலும் உழைப்பினாலும் ஓப்பனிங் பேட்டராக முன்னேறினார்.

1929-30களில் மே.இ.தீவுகளில் இவர் இங்கிலாந்துக்காக கடைசி டெஸ்ட்டை ஆடும்போது இவருக்கு வயது 52. இன்று வரை அதிக வயது டெஸ்ட் ஆடிய வீரர் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரரே இந்த வில்ஃப்ரெட் ரோட்ஸ். 1903-04-ல் ஆஸ்திரேலியா தொடரில் மெல்போர்ன் மைதானத்தில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்கு 8 ஆண்டுகள் சென்று ஜாக் ஹாப்சுடன் சேர்ந்து தொடக்க பார்ட்னர்ஷிப்பாக 323 ரன்கள் கூட்டணி அமைக்க உதவினார். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப் இன்றுவரை இதுவே என்கிறது இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தரவு.

முதிய வயதில் கண் பார்வையை இழந்தார். 1973-ல் 97 வயதில் காலமானார். இன்று வரை இந்த ரோட்ஸ்தான் இங்கிலாந்தின் பெரிய ஆல்ரவுண்டராக மதிக்கப்பட்டு வருகிறார். நெவில் கார்டஸ் இவரைப் பற்றி ஒரு நினைவலைக் கட்டுரையை எழுதி அதை 'தி கார்டியன்' இதழ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x