Published : 28 Oct 2024 01:40 PM
Last Updated : 28 Oct 2024 01:40 PM

அஸ்வின், ஜடேஜா செய்ய முடியாததை செய்த பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் சஜித் கான், நோமன் அலி

கடந்த 18 டெஸ்ட் தொடர்களில் ஒன்றிரண்டு தொடர்கள் நீங்கலாக முழுதும் குழிப்பிட்ச்களாகப் போட்டு கோலி, தோனி உள்ளிட்ட கேப்டன்களின் வெற்றிப்புளிப்புப் பெருமிதத்திற்காகவும், சிறிது காலமாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வணிக நோக்கங்கள் அணித்தேர்வில் செலுத்திய தாக்கத்திற்காகவும் இந்திய அணி பெற்ற பரிசு நியூஸிலாந்திடம் வரலாறு காணாத டெஸ்ட் தொடர் தோல்வி.

மாறாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் வரலாறு காணாத உதையை முல்டான் முதல் டெஸ்ட்டில் வாங்கி, இனி மீளவே வழியில்லை என்று அணியே முடங்கி விட்டது, அடுத்த மே.இ.தீவுகள் போல் ஆகப்போகிறது என்றெல்லாம் இந்திய பட்சபாத ரசிகர்களில் ஒரு பிரிவினர் கெக்கலி கொட்டிச் சிரித்துக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிகப்புப் பந்து கிரிக்கெட் பக்கமே தலைவைத்துப் படுக்காத இடது கை ஸ்பின்னர் நோமன், அலி, சஜித் கான் என்ற ஆஃப் ஸ்பின்னரைக் கொண்டு வந்து தொடரை 2-1 என்று கைப்பற்றியதோடு, இங்கிலாந்தின் ‘பாஸ்பால்’ புளிப்புக்கு செம ஆப்பு வைத்து இங்கிலாந்தை மறுபரிசீலனைச் செய்ய வைத்துள்ளது.

அந்தக் காலத்திலிருந்தே நாம் தோற்றாலும் பாகிஸ்தான் வேறு எங்காவது தோல்வி அடைந்தால் அதைக் கண்டு ரசிக்கும் வக்கிர ரசிக மனோபாவம் கொண்ட பலரை நாம் பார்த்து வருகிறோம். அந்த ரசிகர்களுக்கு இந்த முறை வாய்க்கு அவல் கிடைக்காமல் செய்து விட்டது பாகிஸ்தான் அணி. அதனால் இந்திய தோல்வி குறித்த புலம்பலோசைகள் அதிகம் கேட்கவே செய்கிறது. புலம்பாதீர்கள்!

இந்திய அணியின் முந்தைய கேப்டன்களின் நார்சிச, சுயாதிக்க போக்குகளினால் எப்படியாகினும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வெறியினாலும் 2 - 3 நாட்களில் முடியும் குழிப்பிட்ச்களில் அஸ்வினும் ஜடேஜாவும் ஏகப்பட்ட விக்கெட்டுகளைக் குவித்து அஸ்வின் 500+ விக்கெட்டுகளையும் ஜடேஜா 300+ விக்கெட்டுகளையும் குவித்து ரசிகப்பெருமக்களின் ஏகோபித்த பெருமிதத்ததிற்குக் காரணமாயினர். நல்ல உண்மையான பிட்சில் உழைத்து, சிந்தித்து வீசுமாறு பிட்ச்கள் அமைத்திருந்தால் 500+, 300+ விக்கெட்டுகளெல்லாம் இவ்வளவு சுலபத்தில் வாய்க்கப் பெற்றிருக்குமா என்பது ஐயமே.

இவர்களின் பொற்காலம் முடிவுக்கு வந்தது. ஏனெனில் நியூஸிலாந்து டெஸ்ட் வரலாற்றில் 30 டெஸ்ட் போட்டிகளைக் கூட இத்தனையாண்டுகள் ஆடாத மிட்செல் சாண்ட்னர், டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளுக்கு மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுக்க வாய்க்கப்பெறாத சாண்ட்னர் இங்கு வந்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஸ்பின் பந்து வீச்சில் சூரப்புலிகள்’ என்று பெயர் எடுத்த வீரர்களை வெறும் காகிதப் புலிகளாக்கி விட்டார் எனும் போடு 800 விக்கெட்டுகளை தங்களிடையே பகிர்ந்து கொள்ளும் ஸ்பின் சூரப்புலிகளின் பொற்காலம் மட்டுமல்ல காலமும் முடிந்து விட்டது என்றே பொருள்.

மாறாக பாகிஸ்தானில் நடந்ததென்ன? முதல் டெஸ்ட் போட்டியில் 556 ரன்களை எடுத்தும் இங்கிலாந்தை 800+ ரன்களை வரலாறு காணாத வகையில் குவிக்க வைத்து விட்டு பிறகு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வியை நம்ப முடியாத விதத்தில் அடைந்த பாகிஸ்தான், உடனேயே அணியில் மாற்றங்களைச் செய்கிறது, பாபர் அசாம், ஷாஹின் ஷா அப்ரீடி, நசீம் ஷா போன்ற ஸ்டார்களையே தூக்குகிறது. இங்கு கோலியையோ, ரோஹித்தையோ தூக்க முடியுமா? அவர்கள் செய்தார்கள். எங்கிருந்தோ நோமன் அலி, சஜித் கானைக் கொண்டு வந்து இங்கிலாந்தை கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட்டிப்படைத்து வெற்றி கண்டனர்.

நோமன் அலி என்னும் இடது கை ஸ்பின்னர் ஒரு மரபான ஸ்பின்னர். இவர் இப்போது இடது கை ஸ்பின்னர்கள் மறந்து போன கலையான நடுவருக்கும், ஸ்டம்புக்கும் இடையே வந்து வீசும் டயக்னல் பவுலிங் முறையை அதிகம் கடைப்பிடித்தார், அதில் அதிக வெரைட்டி கிடைக்கும், நோமன் அலியின் ஆர்க், லூப், டிரிஃப்ட் போன்றவை ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒருக்காலும் வராது, இதுவரை வந்ததில்லை என்பதுதான் கிரிக்கெட் தெரிந்த பண்டிதர்களின் அவதானிப்பாக உள்ளது.

சஜீத் கான் வீசும் லெந்த்தை அஸ்வின் இப்போதெல்லாம் மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. நோமன் அலி, சஜித் கான் இருவரும் ஓராண்டில் முதல் தர கிரிக்கெட்டைக் கூட ஆடவில்லை. பாகிஸ்தான் அணிக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் வந்தார்கள் வென்றார்கள். கடைசி 2டெஸ்ட் போட்டிகளில் விழுந்த இங்கிலாந்தின் 40 விக்கெட்டுகளில் 39 விக்கெட்டூகளைச் சாய்த்தனர். 17 டெஸ்ட் போட்டிகளில் 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள நோமன் அலியின் வயது 39. சிறந்தப் பந்து வீச்சு 8/46. சஜித் கான் 10 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பந்து வீச்சு 8/42.

இவர்கள் அழிந்து வரும் ஸ்பின் என்னும் கலைக்கு உத்வேகம் ஊட்டியுள்ளனர், வாஷிங்டன் சுந்தர் அதே போல் பந்துகளை நல்ல பிட்சில் திருப்புவது நல்ல விஷயம். வளர்ந்து வரும் டி20 கிரிக்கெட்டினாலும் ஒருநாள் போட்டிகளில் இரு முனைகளிலும் இரு வேறு பந்துகளில் வீசப்படுவதாலும் ஸ்பின் பந்து வீச்சுக்கு சாவு மணி அடிக்கப்பட்டிருக்கும் வேளையில் நோமன் அலி, சஜித் கான் ஸ்பின்னுக்கு வயதில்லை, திறமைக்கும் வயதில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

பிசிசிஐ மாற்று ஸ்பின்னர்கள் குறித்த பரிசீலனைகளை மேற்கொள்வது நலம். அஸ்வின், ஜடேஜா முடிந்துவிட்டனர். நல்ல மரபான ஸ்பின் பவுலர்களை தேர்வு செய்து அவர்களை நவீன கால டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப வளர்த்தெடுப்பது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x