Published : 26 Oct 2024 11:29 PM
Last Updated : 26 Oct 2024 11:29 PM
புனே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான புனே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு கேப்டன் ரோகித் தெரிவித்தது: “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை விட நியூஸிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. இந்த ஆட்டத்தின் சில தருணங்களை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினோம்.
சில சவால்களில் நாங்கள் தோல்வி கண்டோம். அதற்கான ரிசல்டை நாங்கள் பெற்றுள்ளோம். எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வேண்டியதும் அவசியம். நியூஸிலாந்து அணி 100+ ரன்கள் முன்னிலை பெற்றது. இலக்கை விரட்டிய போது நிச்சயம் அதனை எட்ட முடியும் என்று தான் எண்ணினோம். ஆனால், அழுத்தம் காரணமாக அது நடைபெறவில்லை.
இது எங்களது கூட்டு தோல்வி. இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. வான்கடேவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அங்கு வெல்ல விரும்புகிறோம். எங்களது கவனம் அடுத்த போட்டியில் உள்ளது.
அஸ்வின் மற்றும் ஜடேஜா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர்கள் ஆடுகின்ற போட்டிகளில் விக்கெட் வீழ்த்த வேண்டும், ரன் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகம். அவர்கள் அணிக்காக ஆட்டத்தை வென்று கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நியாயம் அல்ல. டெஸ்ட் போட்டிகளில் ஆட்டத்தை வெல்வது எங்கள் அனைவரது பொறுப்பு. சொந்த மண்ணில் தொடர்ந்து 18 தொடர்களில் இந்தியா வெற்றி பெற அவர்கள் இருவரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்தப் போட்டி வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த போட்டியாக அமைந்தது” என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT