Published : 24 Oct 2024 12:52 PM
Last Updated : 24 Oct 2024 12:52 PM

ரோஹித் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா - பல சாதனைகளை உடைத்தெறிந்த ஜிம்பாப்வே!

நைரோபியில் நடைபெற்ற ஐசிசி டி20 ஆடவர் உலகக் கோப்பை சப் ரீஜனல் ஆப்பிரிக்கா பிரதேசத் தகுதிச் சுற்றுப் போட்டியில் காம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பல சாதனைகளை முறியடித்தது. குறிப்பாக சிக்கந்தர் ராசா, 33 பந்துகளில் டி20 சதம் கண்டு ரோஹித் சர்மாவின் அதிவேக சத சாதனையை முறியடித்தார்.

டெஸ்ட் விளையாடும் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அடிக்கும் அதிவேக டி20 சதம் என்ற வரலாறு படைத்தார் சிக்கந்தர். அதே போல் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த உலக சாதனையாக ஜிம்பாப்வே 344 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய காம்பியா அணி 54 ரன்களுக்குச் சுருண்டு 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே, டி20 கிரிக்கெட்டில் மகத்தான வெற்றியை ஈட்டி இன்னுமொரு உலக சாதனைப் படைத்துள்ளது.

சிக்கந்தர் ரசா 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 133 ரன்கள் விளாசினார். மொத்தம் 27 சிக்சர்கள் என்று ஜிம்பாப்வே சாதனைகள் பலவற்றை முறியடித்துள்ளது. அதே போல் நேபாளம் வைத்திருந்த அதிக டி20 ரன்களான 314 ரன்களை ஜிம்பாப்வே முறியடித்து இன்னொரு உலக சாதனை படைத்தது. அதே போல் 27 சிக்சர்கள் என்பது இதற்கு முந்தைய 26 சிக்சர்கள் சாதனையைக் கடந்து புதிய உலக சாதனையானது.

ஜிம்பாப்வே பிளே என்ற உடன் ஆரம்பித்த அடிதான் 20 ஒவர்கள் வரை ஓயவில்லை சிக்சர்கள், பவுண்டரிகள் மழை 3.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டினர். 100 ரன்கள் பவர் பிளே முடிவதற்கு முன்பே வந்து விட்டது. இந்த இடத்திலிருந்து பந்துகள் மைதானத்தின் பார்வையாளர்கள் பகுதிக்குப் பறந்த வண்ணம் இருந்தன. மொத்தம் 57 பவுண்டரிகள் இது இன்னுமொரு டி20 சாதனை.

நான்கு ஜிம்பாப்வே வீரர்கள் அரைசதம் கண்டதும் இன்னுமொரு டி20 சாதனை என்கின்றன புள்ளிவிவரங்கள். சிக்கந்தர் ராசா இன்னிங்ஸ் ஸ்பெஷல். பவர் பிளே முடிந்தவுடன் இறங்கியுள்ளார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவர் ஷாட்கள் பவுண்டரியும் சிக்ஸருமாகப் பறந்தது. 33 பந்து சதம் நமீபியா வீரர் ஜேன் நிகோல் லாஃப்டி ஈட்டன் சாதனையைச் சமன் செய்தது. ஆனால், டெஸ்ட் விளையாடும் நாட்டு வீரர் சாதனையான ரோஹித் சர்மாவின் 35 பந்து டி20 அதிரடி சத சாதனையும் முறியடிக்கப்பட்டது. காம்பியாவுக்கு இன்னுமொரு மோசமான சாதனை என்னவெனில் அதன் பவுலர் மியூசா ஜொர்பாத்தே 4 ஓவர்களில் 93 ரன்களை வாரி வழங்கி புதிய டி20 வள்ளல் சாதனையைத் தன் வசம் கொண்டு வந்துள்ளார்.

காம்பியா: காம்பியா என்ற நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறு நாடு. 2022 கணக்கீட்டின் படி இதன் மக்கள் தொகை 2.4 மில்லியன் மட்டுமே. இதில் 96 % முஸ்லிம்கள். இவர்கள் எல்லோரும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். அகமதியா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 50 ஆயிரம் பேர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x