Published : 24 Oct 2024 10:23 AM
Last Updated : 24 Oct 2024 10:23 AM

கே.எல்.ராகுல், சிராஜ் வெளியே: ஆகாஷ், வாஷிங்டன் சுந்தர் உள்ளே | IND vs NZ புனே டெஸ்ட்

புனே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான புனே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து கே.எல்.ராகுல், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் பெங்களூரு டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் மூவருக்கும் மாற்றாக ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு அணியில் சான்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.

புனே போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ‘ஆடுகளத்தில் புற்கள் இல்லை. பந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.

“டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பேட் செய்திருப்போம். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் செஷனில் நாங்கள் சிறப்பாக பேட் செய்யவில்லை. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அதை நாங்கள் நேர்மறையாக பார்க்கிறோம். நிச்சயம் இந்தப் போட்டியில் அதை எங்களுக்கு சாதகமாக பார்க்கிறோம். இந்த ஆட்டத்தின் முதல் 10 ஓவர்கள் மிக முக்கியம்” என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

கே.எல்.ராகுல் வெளியே: பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 0 மற்றும் 12 ரன்களை எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் கே.எல்.ராகுல். அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் சொல்லி வந்தனர். இருப்பினும் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்படும் கருத்துகளை நான் கண்டு கொள்வதில்லை என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார். அதனால் புனே டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே போல சொந்த மண்ணில் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறும் முகமது சிராஜ் நீக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவுக்கு பதிலாக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். சூழல் + பேட்டிங் ஆப்ஷனாக அவர் பார்க்கப்படுகிறார். நியூஸிலாந்து அணியில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவரும், அஸ்வினும் சவால் தருவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x