Published : 21 Oct 2024 09:51 AM
Last Updated : 21 Oct 2024 09:51 AM

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி கண்டது ஏன்? - கிரிக்கெட் நிபுணர்கள் அலசல்

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றி வாய்ப்பு இருந்தபோதும் அதை இந்திய அணியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தோல்வி கண்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தான நிலையில் இரண்டாம் நாளன்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 402 ரன்கள் எடுத்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 462 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 106 ரன் கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நியூஸிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை நியூஸிலாந்து அணி தொடங்கியது. ஆனால் முதல் ஓவரில் 4 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. டாம் லதாம், டெவன் கான்வே ஆட்டத்தைத் தொடங்கினர். கேப்டன் டாம் லதாம் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து டெவன் கான்வேயையும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா. அவர் 39 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை நியூஸிலாந்து இழந்த நிலையில் இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால், 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்து நியூஸிலாந்து அணி வெற்றி கண்டது. வில் யங் 48, ரச்சின் ரவீந்திரா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி கண்டது. பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்ஸில் சதமும், 2-வது இன்னிங்ஸில் 39 ரன்களும் விளாசிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

காரணம் என்ன? - இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி வாய்ப்புகள் இருந்தபோதும் அதை கேப்டன் ரோஹித் சர்மா சரியாக பயன்படுத்தாததால் இந்திய அணி தோல்வி காண நேரிட்டது என்று கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியபோது கடைசி 3 விக்கெட்களை வீழ்த்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். அவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு எளிதாகியிருக்கும். ஆனால், ரச்சின் ரவீந்திரா - டிம் சவுதி கூட்டணி 137 ரன்களை ஜோடியாக குவித்து அதிக அளவு முன்னிலையைப் பெற வைத்தது.

இரண்டாவதாக இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸில் சர்பராஸ் கான், ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும், இந்திய வீரர்கள் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்காமல் வரிசையாக ஆட்டமிழந்தனர். 54 ரன்களுக்கு 7 விக்கெட்களை இந்திய அணி கொத்தாக இழந்து சரிவைக் கண்டது. ராகுல், ஜடேஜா, அஸ்வின் போன்றோர் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்து எதிரணிக்கு வெற்றி இலக்கை 200 ரன்களுக்கு மேல் நிர்ணயித்து இருந்தால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்றாவதாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் ஆடுகளத்தை புரிந்துகொள்ளாமல் பந்துவீசியது தவறு என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தப் போட்டியில் களமிறங்க முடிவு செய்தது கேப்டன் ரோஹித்தின் தவறு என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆகாஷ் தீப் போன்று பந்தை ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளரை அணியில் சேர்த்திருந்தால், நியூஸிலாந்து அணிக்கு சவால் அளித்திருக்க முடியும் என்றும் நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.

பந்துவீச்சாளர்களுக்கு டாம் லதாம் பாராட்டு: முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம் என்று நியூஸிலாந்து கேப்டன் டாம் லதாம் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: முதல் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது செல்போன்கள் விடாமல் எங்களுக்கு வாழ்த்து செய்திகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றன. போட்டியில் டாஸில் வெற்றி பெற்றால் முதலில் பேட்டிங் செய்யலாம் என்று இருந்தோம். நல்லவேளையாக நாங்கள் டாஸில் வெற்றி பெறவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு பந்து வீச்சாளர்கள்தான் காரணம். சரியான இடங்களில் பந்துவீசி எதிரணியை மிரட்டினர். முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் எதிரணியை வீழ்த்தியதால் எங்களுக்கு உத்வேகம் கிடைத்தது. தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டு வருவோம்: ரோஹித் - முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும், அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றி மீண்டு வருவோம் என்று இந்திய அணியின் கேப்டன் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.

தோல்விக்குப் பின்னர் ரோஹித் சர்மா கூறியதாவது: கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்று அடிக்கடி நடக்கும். இது சாதாரணமானதுதான். முதல் போட்டியில் தோல்வி கண்டாலும் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று மீண்டு வருவோம்.

அதனால், இந்திய அணியின் நேர்மறையான அம்சங்களை எடுத்து கொண்டு, அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே இப்படியான ஒரு சூழலில் நாங்கள் இருந்திருக்கிறோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வி கண்டோம். ஆனால், அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி கண்டோம். எனவே, இன்னும் 2 போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிவோம். சர்பராஸ் கான் முதல்முறையாக இப்படியொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மண்ணில் 3-வது வெற்றி: இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணி பெற்ற 3-வது வெற்றியாகும் இது. இதுவரை இந்திய மண்ணில் நியூஸிலாந்து அணி 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது.

மேலும், 1988-ம் ஆண்டுக்குப் பிறகு நியூஸிலாந்து முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. 1988-ல் மும்பை வான்கடே மைதானத்தில் நியூஸிலாந்து 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை, வெற்றி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புனேவில் 2-வது டெஸ்ட்: இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, மகாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் அக்டோபர் 24 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x