Published : 19 Oct 2024 02:10 PM
Last Updated : 19 Oct 2024 02:10 PM

‘லேட் கட்’ ஸ்பெஷலிஸ்ட் சர்பராஸ் கான் சதம், கபில் சாதனையை முறியடித்த பந்த்

பெங்களூரு : பெங்களூரு டெஸ்ட் 4-ம் நாளான இன்று இந்திய அணி மிகப்பெரிய பற்றாக்குறை ரன்களை எதிர்த்து கவுண்ட்டர் அட்டாக் பாணியில் ஆடி வருகிறது. சர்பராஸ் கான் அதியற்புதமான தன் திறமைகளைக் காட்டி அசத்தலான முதல் டெஸ்ட் சதத்தை எடுக்க, ரிஷப் பந்த்தும் காட்டடி தர்பாரில் இறங்க இருவரும் சேர்ந்து 22 ஓவர்களில் 113 ரன்களைச் சேர்த்து ஆடி வருகின்றனர். மழை குறுக்கிட்ட போது உணவு இடைவேளை விடப்பட்டது. இப்போது இந்திய அணியின் 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் என்று உள்ளது.

சர்பராஸ் கான் 154 பந்துகளில் 16 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 125 ரன்களுடனும் ரிஷப் பந்த் 56 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 53 ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர். நியூசிலாந்து ரன்களுக்கு எதிரான பற்றாக்குறையைப் போக்க இன்னும் 12 ரன்களே தேவை.

அஜாஜ் படேலின் ஒரு ஓவரில் ரிஷப் பந்த் 2 சிக்சர்களை விளாசி 61 சிக்சர்களுடன் கபில் தேவ்வின் சிக்சர்கள் சாதனையைக் கடந்தார். இப்போது பென் ஸ்டோக்ஸ் 131 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க அடுத்த இடத்தில் 107 சிக்சர்களுடன் பிரெண்டன் மெக்கல்லமும் 100 சிக்சர்களுடன் 3ம் இடத்தில் ஆடம் கில்கிறிஸ்டும், 98 டெஸ்ட் சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் 4ம் இடத்திலும், காலிஸ் 97 சிக்சர்களுடன் டாப் 5-ல் உள்ளனர். 91 சிக்சர்களுடன் சேவாக் இந்திய வீரர்களில் அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்க, ரோஹித் சர்மா 88 சிக்சர்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார்.

இன்று ரூர்க் வீசிய முதல் பந்தையே தேர்ட் மேன் திசையில் தூக்கி விட்டு பவுண்டரி விளாசினார் சர்பராஸ் கான். தேர்ட் மேன், பாயிண்ட் திசையில் சர்பராஸ் கானின் லேட் கட்கள் குண்டப்பா விஸ்வநாத்தை நினைவூட்டுவதாக அமைந்தது. அவரைப் போலவே டீப் தேர்ட் மேன், பயிண்ட் 2 ஸ்லிப் ஒரு கல்லி இருந்தும் லேட் கட் செய்து பவுண்டரிக்கு விரட்ட முடித்து, கிட்டத்தட்ட 50+ ரன்கள் தேர்ட் மேன், டீப் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் அடித்தார் சர்பராஸ் கான்.

நியூஸிலாந்து ரிஷப் பந்த்துக்கு ஒரு அருமையான ரன் அவுட் வாய்ப்பைக் கோட்டை விட்டது. இருமுறை பேட்டில் பட்டதற்கு எல்.பி. கேட்டு தோல்வியுற்றது நியூஸிலாந்து. அதன் பிறகு பந்த், சவுதி பந்தை நேராக மைதானத்துக்கு வெளியே அனுப்பினார். சர்பராஸ் கானை எல்.பி.டபிள்யூ ஆக்க முயற்சி செய்தனர், ஆனால் அவர் திறம்பட அந்த சவாலை முறியடித்தார்.

சர்பராஸ் கான் நியூஸிலாந்தின் மாறும் கள அமைப்புக்கு ஏற்ப தன் ஸ்ட்ரோக்குகளை அற்புதமாக ஆடினார், அதுவும் குறிப்பாக லெக் திசையில் டீப்பில் வைத்துக் கொண்டு ஸ்வீப் ஆடுமாறு மிடில் ஸ்டம்பில் வீசிய பந்தை விக்கெட் கீப்பர் பின்னால் லாப் ஸ்வீப் ஆடிய ஷாட் அவரது கள வியூகத்தை ஏமாற்றும் திறனை பறைசாற்றியது.

இந்த இருவரும் உண்மையில் அபாயகரமான ஜோடி. இவர்கள் தவறான ஷாட்களை ஆட அஞ்சுவதில்லை. களவியூகத்துக்கு சவால் அளிக்கின்றனர். இடைவெளியிலும் ரன்கள் வருகின்றன, பீல்டர் இருக்கும் திசையிலும் தூக்கி அடிக்கப்படுகிறது. இப்போதைக்கு நியூஸிலாந்து மழை வந்ததை நிச்சயம் வரவேற்று ரிலாக்ஸாக இருப்பார்கள் என்றே கூற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x