Published : 18 Oct 2024 09:56 AM
Last Updated : 18 Oct 2024 09:56 AM

பேட்டிங் வரிசை கோலியால் மாறியதா? - சாதாரண ‘டிஃபன்ஸ்’ மறந்த இந்திய அணி!

பெங்களூருவில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளில் நேற்று தொடங்கிய போது ‘கம்பீர்’, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களும், மோர்னி மோர்கெல் உள்ளிட்ட பெருந்தலைகள் இருந்தும் பிட்ச் எப்படி என்பதைப் புரிந்து கொள்ளாமல் கோட்டை விட்டனர்.

மேலும் 3-ம் நிலையில் விராட் கோலி தானே இறங்கியதாகவும் கூறப்படுகிறது. இதோடு சாதாரண தடுப்பாட்ட உத்தியையும் அடிப்படை டெக்னிக்கும் இல்லாமல் ஒரு மட்டரகமான டி20 அணி ஆடியது போல் ஆடி 46 ரன்களுக்குச் சுருண்டு புதிய உள்நாட்டு எதிர்மறைச் சாதனையைப் படைத்தது இந்தியா.

18 தொடர்களை தொடர்ச்சியாக சொந்த மண்ணில் வென்ற திமிரும் கூடியிருந்ததால் காமெடி நடிகர் சந்தானம் ஒரு படத்தில் கூறுவது போல் ‘அதப்பு’ ஏற டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தனர். இறங்கியவுடன் பந்து எகிற, ஸ்விங் ஆக ஹென்றி, சவுதி, ஓ’ரூர்க் கூட்டணி இந்திய பேட்டர்கள் கண்களில் பூச்சி பறக்க விட்டனர். ஜெய்ஸ்வால் இன்னும் பல படி தேற வேண்டும் என்று தெரிந்தது. அதற்குள் அவரை பிரையன் லாரா, கேரி சோபர்ஸ் என்றெல்லாம் ஊடகங்களும் ஒன்றுமறியா 2கே கிட்ஸும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

ரோஹித் சர்மா நேற்று ஆடிய ஆட்டம் தெருவில் ஆடும் ஒரு ரப்பர் பந்து வீரரை நேரடியாக டெஸ்ட் போட்டியில் இறக்கி ஆடு என்பது போல் இருந்தது. அதுவும் அவர் அவுட் ஆன ஷாட் தேர்வு தன்னை ஏதோ விவ் ரிச்சர்ட்ஸ் என்று நினைத்துக் கொண்டார் போலும். தன்னை ரோஹித் சர்மாதான் என்று நினைத்து ஆடியிருந்தாலும் பவுலர்களை வங்கதேச பவுலர்களாகவும் பிட்சை வறண்ட கான்பூர் பிட்ச் ஆகவும் நினைத்து விட்டார் போலும். குச்சி தெறித்ததில்தான் போய் முடிந்தது.

உண்மையில் 3-ம் நிலையில் விராட் கோலி இறங்கியது அவராகக் கேட்டு வாங்கிக் கொள்ளப்பட்டது என்றே செய்திகள் உலா வருகின்றன. அப்படி விராட் கோலி கேட்டு அதற்கு கம்பீர் ஒப்புக் கொண்டு ரோஹித்தும் வேறு வழியில்லாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்ததுதான் நடந்திருக்க வேண்டும். என்ன ஆடினார் விராட் கோலி? தன் இடது காலை அரையும் குறையுமாக நீட்டி வெளியே செல்லும் பந்தை நோண்டுவதும், எகிறும் பந்துகளுக்கு தடுமாறுவதும்தான் அவரது ஆட்டமாகப் போய்விட்டது. கடைசியில் அதே அரைகுறை முன் கால் நீட்டலில் பந்து எகிற ஒரு கையில் அசிங்கமாக பின் ஷார்ட் லெக்கில் நிறுத்தி வைத்து எடுக்கப்பட்டார். அசிங்கமான ஆட்டமாக அமைந்தது, இதை விட்டுவிடுவோம் சமீபமாக இப்படித்தான் ஆடி வருகிறார்.

கே.எல்.ராகுல்தான் 3-ம் நிலையில் வந்திருக்க வேண்டும், அவர் வந்தும் ஒன்றும் பெரிதாக ஆடி விடப்போவதில்லை என்பது அவர் ஆடிய ஆட்டத்தில் தெரிந்தாலும், குறைந்தது கே.எல்.ராகுல் 3-ம் நிலையில் இறங்கி ஆட்டமிழந்த பிறகு 4-ம் நிலையில் விராட் கோலி கொஞ்சம் ஸ்திரப்படுத்தியிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால் அதையும் கெடுத்தார் விராட் கோலி.

நினைவிருக்கிறதா ‘கேப்டன்’ விராட் கோலி? - இங்கு ஒன்றை நாம் நினைவுகூர்வதும் விராட் கோலி ரசிகப்படைகள் நினைவில் கொள்வதும் வேண்டும். விராட் கோலி கேப்டனான புதிதில் இலங்கை தொடரில் புஜாரா மிகவும் ஸ்லோவாக ஆடுகிறார் என்று அவரை ஒரு போட்டியில் அநியாயமாக ட்ராப் செய்தார். இன்று இவர் என்ன ஆடுகிறார்? புஜாராவுக்கு நாம் என்ன செய்தோம் என்ற நினைவு வேண்டாமா அவருக்கு?

அதன் பிறகு 2018 ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி வென்றதற்கு புஜாராவின் 3 சதங்கள்தான் முக்கியப் பங்களிப்பு, இதையாவது பாராட்டியிருக்கிறாரா விராட் கோலி? மாறாக அந்தத் தொடரின் போது சிட்னி பெவிலியன் பலகையில் புஜாரா பெயர் எழுதப்பட்டதை இடக்கரடக்கலாக கிண்டல் செய்யுமாறு ‘பலகையில் எழுதப்படுவதெல்லாம் ஒன்றுமில்லை’ ரஹானே போல் சிறிய பங்களிப்பு பெரிய விஷயம் என்று குதர்க்கமாகவும் வன்மமாகவும் பேட்டி அளித்தவர் தான் நாம் போற்றும் இந்த கிரேட் பேட்டர்.

கோலி 3-ம் நிலையில் இறங்கியதால் அவர் ஆட்டமிழந்த பிறகு நியூஸிலாந்து இந்திய அணி பேட்டிங் வரிசை மீது புகுந்து விளையாடியது. சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் இறங்கும் டவுனை விட முன்னே இறக்கப்பட்டார். அவரை அட்டாக் பண்ணு என்று சொல்லியிருப்பார்கள். அவரும் செய்தார் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை, டெவன் கான்வே ஆகப்பெரிய ஒரு கேட்சைப் பிடித்து அசத்தி விட்டார், கோலி 3-ம் நிலையில் இறங்கியதால் ராகுல், சர்பராஸ் கான் டவுன் ஆர்டர்கள் குழப்பமாகி அணியே இந்தியாவில் ஆகக்குறைந்த ஸ்கோருக்கு மடிந்தது.

கிளாசிக் தடுப்பாட்டம் எங்கே? - இந்திய பேட்டர்கள் நேற்று துல்லிய நியூஸிலாந்து பந்து வீச்சுக்கு எதிராக தவறான ஷாட்களைத்தான் ஆடினர். 32 தவறான ஷாட்களில் இந்தியா 46 ரன்களுக்கு மடிந்ததாக கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எடுத்த எடுப்பிலேயே ஏதோ உகாண்டா பவுலர்கள் வீசுவது போல் மட்டையை வீசுகின்றனர் இந்திய பேட்டர்கள், முதலில் பிட்சைப் பற்றி அறியாமல் பேட்டிங் எடுத்தது தவறு, அப்படியே எடுத்தாலும் பிட்ச்சை இறங்கிய பிறகு புரிந்து கொண்டு பந்து வந்த பிறகு ஆடியிருக்க வேண்டும். மரபான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடியிருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் 36 ஆல் அவுட் ஆன போது தவறான ஷாட்கள் என்று சொல்ல முடியாது, எட்ஜ் ஆனது எல்லாம் கைக்குச் சென்றது. அதனால் இப்படி இன்னொரு நாள் அமையாது என்ற நம்பிக்கை அமைந்தது, அடுத்த மெல்போர்ன் போட்டியிலேயே ரஹானே சதம் எடுக்க இந்திய அணி தலைவிதியை மாற்றி போட்டியை வென்றதோடு ரஹானே தலைமையில் தொடரையும் இரண்டாவது முறையாக அங்கே வென்றது.

ஆனால் நேற்று நடந்தது அன்று நடந்தது போன்ற 36 ஆல் அவுட் போன்றதல்ல, இது பேட்டிங் தடுப்பு உத்தி கைவசம் இல்லாததனால் வந்த வினை, இந்த முறை இந்த 46 ஆல் அவுட் இவர்கள் மனதிலிருந்து அகல நீண்ட காலம் பிடிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x