Published : 17 Oct 2024 03:48 PM
Last Updated : 17 Oct 2024 03:48 PM

டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் ஹேமங் பதானி!

ஹேமங் பதானி (கோப்புப் படம்)

புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஹேமங் பதானி டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரோடு மற்றொரு முன்னாள் இந்திய வீரர் வேணுகோபால் ராவை இயக்குநராக நியமித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ்.

ஏழு சீசன்களுக்குப் பிறகு ரிக்கிபாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் தலைமை கோச் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்று பஞ்சாப் கிங்ஸுக்கு தலைமைப் பயிற்சியாளர் ஆனார். இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2014 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், புதிய திறமைகளை கண்டுப்பிடிப்பவராகவும் இருந்து வருகிறார், ஆனால் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. ஆம்ரே கழற்றி விடப்பட்டுள்ளார். அதேசமயம், டெல்லி கேபிடல்ஸின் மகளிர் பிரிவு பிரீமியர் லீக் கிரிக்கெட் இயக்குநராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். பிறகு 2027-ல் மீண்டும் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.டபிள்யூ, ஸ்போர்ட்ஸ் ஆடவர் ஐபிஎல் டெல்லி அணிக்கு பொறுப்பாளராக வரும்போது கங்குலி மீண்டும் இங்கு இயக்குநராவார்.

வெறும் 4 டெஸ்ட்கள் 40 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிய ஹேமங் பதானி ஏன் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று கேள்வி எழுவது நியாயமே. ஆனால் உள்நாட்டு டி20 கிரிக்கெட் அரங்கில் ஹேமங் பதானி ஒரு வெற்றிகரமான பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடக்கக் காலங்களில் சிஎஸ்கே அணியில் இருந்தார். டிஎன்பிஎல் டி20 லீக் அணியான சேப்பாக் சூப்பர் லீக் பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்த அணி 3 டிஎன்பிஎல் கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இதோடு சாய் கிஷோர் போன்ற இளம் வீரர்களை உருவாக்கியதில் ஹேமங் பதானியின் பங்கும் குறிப்பிடத்தகுந்தது என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் 2022-ல் சன் ரைசர்ஸ் அணியின் ஃபீல்டிங் கோச் ஆக இருந்தார் பதானி. 2023-ல் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் உதவிப்பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ஜாஃப்னா கிங்ஸ் அணி, லங்கா பிரிமியர் லீக் கோப்பையை வென்ற போது பதானி பயிற்சி ஆலோசகராக அந்த அணிக்கு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளரான ஜிஎம்ஆர் குரூப் அணியான துபாய் கேபிடல்ஸ் அணி ஐல்டி20 தொடர் ரன்னர்களாக வந்த போது ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பயிற்சியில் நீண்ட அனுபவமும் திறமையும் பெற்றவர் ஹேமங் பதானி என்பதால்தான் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x