Published : 17 Oct 2024 02:53 PM
Last Updated : 17 Oct 2024 02:53 PM
பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது இந்திய அணி. 11 பேட்ஸ்மேன்களில் இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது. இது ஆசிய மண்ணில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ரன்களாகவும் உள்ளது. இதற்கு முன்னர் 53 ரன்கள் ஒரு அணி எடுத்ததே குறைந்தபட்ச ரன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களுருவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரோகித் 2 ரன்களில் வெளியேறினார். கோலி மற்றும் சர்பராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பந்த் 20 ரன்கள், பும்ரா 1 மற்றும் குல்தீப் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள நியூஸிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 50+ ரன்களை எடுத்துள்ளது. கான்வே விரைந்து ரன் சேர்த்து வருகிறார். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு ஆல் அவுட் செய்துள்ளது நியூஸிலாந்து.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூன்றாவது குறைந்தபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது. கடந்த 2020-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் 36 ரன்களும், 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் 42 ரன்களும் எடுத்திருந்தது. சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT