Published : 16 Oct 2024 07:17 AM
Last Updated : 16 Oct 2024 07:17 AM

கம்ரன் குலாம் சதம் விளாசல்: பாகிஸ்தான் அணி 259 ரன்கள் சேர்ப்பு

முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. கம்ரன் குலாம் சதம் விளாசினார்.

முல்தானில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அப்துல்லா ஷபிக் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்தில் போல்டானார்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் 3 ரன்களில் ஜேக் லீச் பந்தில் நடையை கட்டினார். 19 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் சைம் அயூப்புடன் இணைந்த அறிமுக வீரரான கம்ரன் குலாம் நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.

பொறுமையாக விளையாடிய சைம் அயூப் 160 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூ பாட்ஸ் பந்தில் மிட் ஆஃப் திசையில் நின்ற பென் ஸ்டோக்ஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு சைம் அயூப்-கம்ரன் குலாம் ஜோடி 149 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய சவுத் ஷகீல் 4 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.

5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தி ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய கம்ரன் குலாம் 192 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார்.

சிறப்பாக பேட் செய்த வந்த கம்ரன் குலாம் 224 பந்துகளில், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 118 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் போல்டானார். முகமது ரிஸ்வானுடன் இணைந்து கம்ரன் குலாம் 5-வது விக்கெட்டுக்கு 65ரன்கள் சேர்த்தார்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 89 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களும், சல்மான் ஆகா 19 பந்துகளில், 5 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க பாகிஸ்தான் அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x