Published : 09 Oct 2024 12:33 PM
Last Updated : 09 Oct 2024 12:33 PM

கம்பீரைப் போற்றுபவர்கள் ‘அடிவருடிகள்’ - சுனில் கவாஸ்கர் சாடல்

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கான்பூரில் இந்திய அணி பயங்கர ஆக்ரோஷமாக ஆடி அதிவேக ரன் குவிப்பில் உலக சாதனை புரிந்ததற்கு பயிற்சியாளர் கம்பீரைப் புகழ்பவர்கள் அவரது ‘அடிவருடிகளே’ தவிர வேறு யாருமல்லர், இந்த புதிய ஆக்ரோஷ அணுகுமுறைக்கு கேப்டன் ரோஹித் சர்மாவே முழு முதல் காரணம் என்று அடித்துச் சொல்கிறார் சுனில் கவாஸ்கர்.

‘தி இந்து’ ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிகைக்கு அவர் எழுதிய பத்தியில் கம்பீரைக் காரணமாகக் கூறுபவர்களை, கம்பீரைப் புகழ்பவர்களை ‘foot-lickers of highest quality' சாடியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிராக கான்பூர் டெஸ்ட் போட்டி ஏறக்குறைய செத்த போட்டியாக முடிந்திருக்கும். ஆனால் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆக்ரோஷ பேட்டிங் அணுகுமுறை போட்டிக்கு உயிர் கொடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை நாளில் இந்தியா டெஸ்ட்டையே வென்றது. இது உலகம் முழுதும் பெரிய பாராட்டுகளை ஈர்த்தது. காரணம் எந்த ஒரு இந்திய கேப்டனும் இப்படி முடிவு எடுத்ததில்லை. இங்கிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் ஒரு டெஸ்ட் வெற்றியை ராகுல் திராவிட் கேப்டன்சியில் வாய்ப்பைப் பறிகொடுத்த ஆக்ரோஷமற்ற தன்மையைப் பார்த்திருக்கிறோம்.

அதிசயக் கேப்டன் என்று போற்றப்படும் தோனி தென் ஆப்பிரிக்காவில் புதிய பந்தை எடுக்காமல் 80 ஓவர்கள் முடிந்த பந்தை வைத்துக் கொண்டே 150 ஓவர்கள் வரை வீசி வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட்டதையும், இதே போற்றத்தகக் கேப்டன் தோனி மே.இ.தீவுகளில் ஒருமுறை கடைசி நாளில் 14 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஏற்கெனவே தொடரை வென்ற கெத்தில் கைவிட்டதையும் நினைவிலிருந்து அகற்ற முடியாத வேளையிலும், பழைய கால டெஸ்ட் போட்டிகளில் சுனில் கவாஸ்கர் கேப்டன்சியில் இதே போன்ற டெஸ்ட் போட்டிகள் சுனில் கவாஸ்கரின் ஒரு சதமாக முடிந்து அறுவையாக டெஸ்ட் ட்ரா ஆவதையும் நாம் பார்த்துத்தானே இருக்கிறோம்.

அந்த வகையில் ரோஹித் சர்மாவின் ஆக்ரோஷ அதிரடியையும் ஜெய்ஸ்வால், கோலி உட்பட அனைவரையும் அடித்து ஆட வைத்ததையும் சிறந்த கேப்டனுக்குரிய தலைமைத்துவம் என்று பாராட்டுக்குரிய தகுதியை ரோஹித் சர்மாவிடம் காண்கிறோம். இந்நிலையில் கவாஸ்கர் அந்தப் பத்தியில் எழுதியிருப்பதாவது: "செய்தித்தாள் ஒன்றில் ரோஹித் சர்மாவின் அன்றைய அதிரடி அணுகுமுறையை ‘பாஸ்பால்’ அதாவது இந்திய அணியின் கேப்டன், பாஸ் என்ற பொருளில் பாஸ்பால் என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். சில தேய்ந்த பழைய அதிகார மட்டம் கம்பீர்தான் இதற்குக் காரணம் என்பது போல் ‘காம்பால்’ என்று பெயரிட்டனர். இங்கிலாந்தின் பேட்டிங் அணுகுமுறை மெக்கல்லம்-பென் ஸ்டோக்ஸ் அணுகுமுறையில் அதிரடி அவதாரம் எடுக்க ரோஹித் சர்மா அத்தகைய அணுகுமுறையை சில வருடங்களாகவே கையாண்டு வருவதைப் பார்க்கிறோம்.

கம்பீர் இப்போதுதான் கோச் ஆக சேர்ந்திருக்கிறார். ஆகவே ரோஹித்தின் ஆக்ரோஷத்தை, அணுகுமுறையை கம்பீருக்கு ஏற்றி உரைப்பது ஆவரது அடிவருடிகளே. அவர்கள் நல்ல தரமான அடிவருடிகள். கம்பீரே இத்தகைய அதிரடி அணுகுமுறையில் ஆடியதில்லை. மெக்கல்லம் ஆடிய வழியில் கம்பிர் ஆடியிருக்கிறாரா என்பதே என் கேள்வி. இந்த அதிரடி அணுகுமுறைக்கு ஒருவரைப் பாராட்ட வேண்டுமென்றால் அது ரோஹித் சர்மாவை மட்டும்தான். இந்த பால், அந்த பால் என்றெல்லாம் கதைக்காமல் ரோஹித் சர்மாவில் உள்ள ஹிட்டை வைத்து ‘கோஹிட்’ என்று சொல்லலாம். புதிதாக யோசிக்க வேண்டும், அதை விடுத்து அதே அறுவையான Bazzball என்று ஏன் கூற வேண்டும்” இவ்வாறு கவாஸ்கர் சாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x