Published : 08 Oct 2024 12:14 PM
Last Updated : 08 Oct 2024 12:14 PM

தூக்கிய காலர், கூலிங் கிளாஸ்.. ஸ்லெட்ஜிங்: கோலியை ‘இமிடேட்’ செய்யும் யு-19 வீரர் நித்ய பாண்டியா

சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான போட்டியில் இந்திய யு-19 வீரர் நித்ய பாண்டியா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆள் குட்டையானவர்தான். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று இவரைப் பற்றி கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இடது கை வீரரான இவர் விராட் கோலியின் பரம விசிறி. அவரைப்போலவே பேசிக்கொண்டே இருப்பது, பாடி லாங்குவேஜ் காட்டுவது, ஸ்லெட்ஜிங் செய்வது, அரட்டை அடிப்பது, தூக்கிய காலர், கூலிங் கிளாஸ் சகிதம் நித்ய பாண்டியா தன்னை இன்னொரு கோலி என்றே அழைத்துக் கொள்கிறார்.

ஆஸ்திரேலியா யு-19க்கு எதிரான டெஸ்ட்டில் 94 ரன்களை எடுத்தார். டீப்பில் நிற்க வைத்து ஷார்ட் பிட்ச் பவுன்சர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது கோலியைப் போலவே சவாலை எதிர்கொண்டார். ஆனால் எதிர்கொண்டதன் சிக்கல் ஆட்டமிழந்து வெளியேறினார், ஆனால் பவுலர்கள் நிர்ணயிக்கும் சவாலை எதிர்கொள்வதில் கோலியைத்தான் பின்பற்றுவதாகக் கூறுகிறார் அவர்.

ஸ்லிப்பில் நின்று கொண்டு கோலியைப் போலவே எதிரணி வீரரை ஸ்லெட்ஜ் செய்கிறார். சக பீல்டர்களுடன் பேசுகிறார். பவுலருடன் பேசுகிறார். கோலியைப் போலவே பேட் செய்யும் போது பவுலர் ஓடி வரும் போது இவரும் டவுன் த ட்ராக் வருகிறார். இப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் மிகுதி ஆர்வம் காட்டுபவராக அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் நித்ய பாண்டியா.

நித்ய பாண்டியாவை 13 வயது முதலே கோச் செய்து வரும் திக்விஜய் ராத்வா, ஆங்கில நாளேடு ஒன்றிற்கு இவரைப் பற்றிக் கூறும்போது, “பேசிக்கொண்டே இருப்பது அவர் ஆட்டத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியே” என்கிறார்.

விராட் கோலியை தன் லட்சிய வீரராக, ஆளுமையாகக் கொண்ட பாண்டியா உண்மையில் அவரைப்போலவே பேட் செய்வதையும் அவரைப் போலவே ஸ்லெட்ஜ் செய்வதையும் தன் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளார்.

இந்தப் பேச்சு, ஸ்லெட்ஜிங் ஆகியவற்றை கோலியைப் பார்த்துப் பார்த்து தன்னிடத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறார். களத்தில் இறங்கும்போது கோலியைப் போலவே இறங்குகிறார், தூக்கிய காலர், சன் கிளாஸ், பீல்டிங் மற்றும் விக்கெட்டைக் கொண்டாடுதல் என்று அனைத்தையும் கோலியைப் போலவே செய்கிறார். கோலி இன்று ஒன்றைச் செய்தால் மறுநாள் பாண்டியா அதை களத்தில் செய்வார். அந்த அளவுக்குக் கோலியை நெருக்கமாகப் பார்த்து வருகிறார்.

இத்தகைய பாண்டியா ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் பிறந்தவர். கிரிக்கெட்டுக்காக தன் தாயார் மற்றும் சகோதரியுடன் வதோதரா வந்துள்ளார். கிரிக்கெட்டிற்கு இத்தகைய புதிய ரத்தம் எனெர்ஜி தேவைதான், ஆனாலும் ஆட்டத்தில் கவனம் போய் வெறுமனே இதிலேயே கவனமாகி விடக்கூடாது என்பதில் நித்ய பாண்டியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலில் கோலியின் பலவீனத்தை அறிந்து அதை பேட்டிங்கில் விட்டு விட வேண்டும், அதையும் இமிடேட் செய்வதாக இவர் கரியர் முடிந்து விடக் கூடாது என்பதுதான் ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x