Published : 08 Oct 2024 05:05 AM
Last Updated : 08 Oct 2024 05:05 AM
அபுதாபி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 69 ரன்களில் வென்றுள்ளது அயர்லாந்து அணி. இதன் மூலம் 1-2 என்ற கணக்கில் தொடரை நிறைவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. கேப்டன் பால் ஸ்டர்லிங் மற்றும் பால்பிர்னி இணைந்தது 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஸ்டர்லிங் 88, ஹாரி டெக்டர் 60, பால்பிர்னி 45, கேம்பர் 34, லோர்கன் டக்கர் 26 ரன்கள் எடுத்தனர். ஒருகட்டத்தில் 300 ரன்களை எட்டும் நிலையில் இருந்தது. இருப்பினும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் வில்லியம்ஸ் 49-வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய காரணத்தால் அயர்லாந்தின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைந்து ஆட்டமிழந்தனர். ஜேசன் ஸ்மித் 93 பந்துகளில் 91 ரன்களை எடுத்தார். அவரது ஆட்டம் அயர்லாந்து அணியின் வெற்றியை சற்றே தள்ளிப்போட்டது. 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் 69 ரன்களில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT