Published : 06 Oct 2024 07:18 AM
Last Updated : 06 Oct 2024 07:18 AM
லக்னோ: இரானி கோப்பையை 15-வது முறையாக வென்றது மும்பை அணி. இந்த தொடரில் அந்த அணி 27 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி உள்ளது.
மும்பை - ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை தொடர் லக்னோவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்களும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்களும் குவித்தன. 121 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
தனுஷ் கோட்டியான் 150 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 114 ரன்களும்,மோஹித் அவஷ்தி 51 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஷெசனில் 451 ரன்கள் இலக்கை துரத்த வேண்டியது இருந்ததால் ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரானி கோப்பையை மும்பை அணி வெல்வது இது 15-வது முறையாகும். அதேவேளையில் அந்த அணி இந்தத் தொடரில் 27 வருடங்களுக்கு பிறகு தற்போது கோப்பையை கைப்பற்றியுள்ளது.
கடைசியாக மும்பை அணி 1997-98-ம் ஆண்டு சீசனில் மகுடம் சூடியிருந்தது. அதன் பின்னர் 8 முறை இரானி கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. கடைசியாக 2015-16 சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை அணி விளையாடியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT