Published : 04 Oct 2024 09:23 AM
Last Updated : 04 Oct 2024 09:23 AM
ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை 31 ரன்களில் வீழ்த்தி உள்ளது பாகிஸ்தான் அணி.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று (வியாழக்கிழமை) விளையாடியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணி 20 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் பாத்திமா சனா 30 ரன்கள் எடுத்திருந்தார். நிதா தர், 23 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
117 ரன்கள் என்ற இலக்கை நடப்பு ஆசிய சாம்பியனான இலங்கை அணி எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு அதை தகர்த்தது. மொத்தம் 61 டாட் பந்துகளை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் வீசி இருந்தனர். அது இலங்கை அணிக்கு நெருக்கடியாக அமைந்தது.
இலங்கையின் கேப்டன் சமரி அத்தப்பத்து மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் சோபிக்க தவறியது இலங்கையின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால் 3 மற்றும் பாத்திமா, உமைமா, நஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். நிதா தர் மற்றும் துபா ஹசன் ஆகியோர் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் ரன்கள் அதிகம் கொடுக்கவில்லை.
20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை. இதன் மூலம் 31 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பவுலர் டியானா பெய்க் காயமடைந்தார். அந்த காயம் பெரிய அளவில் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு இந்த தொடரில் அது சாதகமாக அமையும்.
“தொடரில் இயன்றவரை அதிக போட்டிகளில் வெற்றி பெற விரும்புகிறோம். அணி நிர்வாகம் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் போட்டியில் சமரி அத்தப்பத்து விக்கெட்டை விரைந்து வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம். அதை நாங்கள் செய்தோம். ஆட்டத்தில் வெற்றி பெற்றோம்” என பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா தெரிவித்தார். பிளேயர் ஆப் தி மேட்ச் விருதையும் அவர்தான் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT