Published : 02 Oct 2024 09:27 AM
Last Updated : 02 Oct 2024 09:27 AM

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்த பாபர் அஸம்

பாபர் அஸம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண வேண்டியுள்ளது.

தனது முடிவை செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார் பாபர் அஸம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அந்த அணியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் இந்த நிலை தொடர்கிறது. உள்நாடு மற்றும் அயலகம் என அந்த அணி தடுமாறி வருகிறது. இந்த சூழலில் பாபர் அஸம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் வலியுறுத்தி இருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறிய நிலையில் மூன்று ஃபார்மெட் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அஸம் விலகினார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் தான் கடந்த 12 மாதங்களில் இரண்டாவது முறையாக கேப்டன்சி பொறுப்பை தற்போது துறந்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு அவரது இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

“பாகிஸ்தான் அணியை வழிநடத்தியது கவுரவமாகும். இந்த பணியில் உள்ள பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது குறித்து ஏற்கெனவே அணி நிர்வாகம் மற்றும் வாரியத்திடம் தெரிவித்திருந்தேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. வரும் நாட்களில் அணியில் ஒரு வீரனாக எனது பங்களிப்பை வழங்க உள்ளேன்” என பாபர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

அடுத்த கேப்டன் யார்? ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக அடுத்த கேப்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்க வேண்டி உள்ளது. இப்போதைக்கு ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அந்த ஆப்ஷனில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் அஃப்ரிடி தலைமையில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் இழந்திருந்தது. அதனால் மற்ற இருவருக்கு கேப்டன்சி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x