Published : 30 Sep 2024 12:45 PM
Last Updated : 30 Sep 2024 12:45 PM
ஆட்டத்தை முன் கூட்டியே நிர்ணயிக்கும் சூதாட்டச் சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்களால் 1990-களில் பாகிஸ்தான் அணிக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஒவ்வொரு முறை இந்தியாவிடம் இந்த ஆண்டுகளில் தோற்கும் போதெல்லாம் ஆட்ட நிர்ணய சூதாட்ட சந்தேகம் எழுந்து எங்களை கடுமையாகப் பாதித்தது என்று பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் முடாசர் நாசர் வேதனை தெரிவித்துள்ளார்.
முடாசர் நாசர் ஒரு திறமையான தொடக்க வீரர். இப்போது இவருக்கு வயது 68. பாகிஸ்தானுக்காக 1976 முதல் 1989 வரை விளையாடினார். 76 டெஸ்ட் போட்டிகளில் 6767 ரன்கள் எடுத்ததோடு நல்ல பயனுள்ள ஸ்விங் பவுலராகவும் சிறப்பாகச் செயலாற்றியுள்ளார்.
1990-களில் பாகிஸ்தான் அணி வலுவாக இருந்தது. திறமையான வீரர்கள் பலரினால்தான் 1992 உலகக் கோப்பையை நிறைய அதிர்ஷ்டத்தில் வென்றது பாகிஸ்தான். ஆனால் இந்தக் காலக்கட்டங்களில்தான் சூதாட்ட சர்ச்சை பெரிய அளவில் பூதாகரமாகி பாகிஸ்தான் அணியின் இமேஜையே பாதித்தது, இதனால் வீரர்கள் கடும் அச்சமடைந்தனர். தோற்றால் உடனே சூதாட்டம் என்றக் குற்றச்சாட்டு எழுவது அப்போது சகஜம் என்கிறார் முடாசர் நாசர்.
“1990களில் பாகிஸ்தான் அணியை நீங்கள் பார்த்தீர்களானால் திறமையைக் கொண்டு அளவிட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு சமமாகத் திகழ்ந்தது. ஆனால் போட்டியை தோற்றால் எழும் குற்றச்சாட்டுகள் வீரர்களை எப்போதும் ஒரு பயத்திலேயே வைத்திருந்தது. நான் இங்கு சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுகிறேன். மேட்ச் பிக்சிங் குறித்த சர்ச்சைகள் பாகிஸ்தான் அணியைச் சுற்றியே நிகழ்ந்தன. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் மனதில் அழுத்தம் அதிகமிருந்தது. ஒவ்வொரு முறை போட்டியில் தோற்கும் போதெல்லாம் மேட்ச் பிக்சிங் சர்ச்சைகள் எழுவது சகஜம். மக்கள் அந்தப் போட்டி சூதாட்டமானது, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று தீவிரமாக நம்பினர். உண்மையில் வலுவான அணியிடம் தோற்றால் கூட அந்த அணி வலுவான அணி என்பதை மக்களுக்கு ஏற்க மனம் வரவில்லை. சூதாட்டம்தான் காரணம் என்று திடமாக நம்பினர்.
எனவே அந்தக் காலக்கட்டத்தில் தோற்கும் நிலை வந்தாலே வீரர்களிடம் நான் உட்பட பயம் அடிவயிற்றைத் தொற்றிக்கொள்ளும். இதுதான் இந்தியாவுக்கு எதிராக ஆடும் போதும். எந்த இந்தியரும் எந்த பாகிஸ்தானியரும் தோற்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதே நிலை. ஷார்ஜாவில் அதை அனுபவித்திருக்கிறோம். அதனால்தான் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது பெரிய நிகழ்வாக இருந்தது.
இது கிரிக்கெட்டில் அல்ல, பொதுமக்களைப் பொறுத்தவரை அது பெரிய நிகழ்வு. ஆனால் மேட்ச் பிக்சிங் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டை பெரிய அளவில் பாதித்தது என்பதுதான் உண்மை” என்றார் முடாசர் நாசர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT