Published : 30 Sep 2024 07:06 AM
Last Updated : 30 Sep 2024 07:06 AM

ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுவது உறுதி: ரூ.4 கோடியை ஊதியமாக பெறுவார் என எதிர்பார்ப்பு

புதுடெல்லி: 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்த புதிய விதிகள் இதை உறுதி செய்துள்ளன. அவர் ஊதியமாக ரூ.4 கோடியைப் பெறுவார் என்று தெரியவந்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் புகழ் பரவியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இந்தப் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான விதிகளை வகுப்பது உள்ளிட்டவை குறித்து பெங்களூருவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஓர் அணிஎத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும், சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில் விளையாடாத வீரர்களின் நிலை என்ன, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வானபின்னர் போட்டிகளில் பங்கேற்காதமுடியாமல் விலகும் வீரர்களுக்கான தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வுபெற்ற வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளிட்டபல்வேறு விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஐபிஎல்நிர்வாகிகளுடன் அணி உரிமையாளர்கள் ஆலோசனையும் நடத்தினர். இதையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா இதை அறிவித்தார்.

புதிய விதிகள் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் உள்ள 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதனை தக்கவைப்பு அல்லது ஆர்டிஎம் விதியின் மூலம் நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். 2022-ல் ஓர் அணி அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

தற்போது இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதுமட்டுமல்லாமல், அதிகபட்சமாக 2 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத (அன்கேப்டு) வீரர்கள் மட்டுமே இருக்கமுடியும்.

ஐபிஎல் 2025 போட்டிக்கான ஏலத்தின் போது அணிகளின் கையிருப்புத் தொகை யும் உயர்த்தப்பட்டுள்ளது. 2024 சீசனின் போது அணி ஏலத்தொகை மற்றும் ஊக்கத்தொகையானது ரூ.110 கோடியாக இருந்தது. இனிவரும் சீசனில் ஏலத்தொகை, ஊக்கத்தொகை, போட்டி ஊதியம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இந்தத் தொகையானது 2025-ம் ஆண்டில் ரூ.146 கோடியாகவும், 2026 சீசனில் ரூ.151 கோடியாகவும், 2027 சீசனில் ரூ.157 கோடியாகவும் உயர்த்தப்படும். 2025 சீசனில் வீரர்கள் ஏலத்துக்காக மட்டும் ரூ.120 கோடியை ஓர் அணி செலவிடலாம்.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி ஊதியம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்பாக்ட் பிளேயர் உள்பட விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் தலா ரூ.7.50 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொகைஒப்பந்த தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.

மேலும், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் கட்டாயமாக தங்களது பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெளிநாட்டு வீரர் பதிவு செய்யாமல் இருந்தால், அந்த வீரர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாட தகுதியற்றவராக கருதப்படுவார்.

அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்த எந்தவொரு வீரரும், ஏலத்தில் ஓர் அணியால்வாங்கப்பட்ட பின்னர், சீசன் தொடங்குவதற்கு முன்பாக தங்களால் விளையாட முடியாத நிலை இருப்பதாக அறிவிக்க நேர்ந்தால், அந்த வீரர் அந்தத் தொடரிலும் அடுத்து வரும் 2 ஐபிஎல் சீசனிலும், ஏலத்திலும் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.

இதேபோல் கேப்டு இந்திய வீரர்ஒருவரை `அன்கேப்டு வீரராக` மாற்றமுடியும். அதாவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருக்கவேண்டும். மேலும்,பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்திலும் அவரது பெயர் இடம் பெறாமல் இருந்தால் அவர் “அன்கேப்டு வீரராக” மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும்.

மேலும், இம்பாக்ட் பிளேயர் விதிமுறை 2027 ஐபிஎல் சீசன் வரை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறைகிறது சம்பளம்: தோனி, சர்வதேச போட்டியில் விளையாடி (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது அவர் பிசிசிஐஒப்பந்தத்தில் கூட இல்லை. இந்நிலையில்தான் ஐபிஎல் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ‘அன்கேப்டு பிளேயராக’ தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மெகா ஏலத்துக்கு முன்னதாக 6 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக நிச்சயம் தோனி 6 வீரர்களில் ஒருவராக சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. தற்போது ரூ.12 கோடி ரூபாய் ஊதியமாக பெற்று வரும் தோனி ‘அன்கேப்டு’ வீரராக தக்க வைக்கப்படும் பட்சத்தில் அவரது ஊதியத்தில் இருந்து 66.67% சம்பளம் குறைக்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வரும் அவர், அடுத்த சீசனில் ரூ.4 கோடி ஊதியமாக பெறுவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x